Monday, June 18, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 7

நோர்வே - 7!


நோர்வே நாடு பற்றிய தொடரை முடித்து விட்டேன் என்று எண்ணியிருந்த வேளையில், எனக்கு எதிர் பாராமல் கிடைத்த சில சரித்திர தகவல்கள் இதை அடுத்த பகுதிக்கு கொண்டு சென்று விட்டது :).

நோர்வேயில் பேர்கன் நகரமானது இரண்டாவது பெரிய நகரமாகும் 1240 ஆம் ஆண்டில் பேர்கன் நோர்வேயின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய தலைநகரம் ஒஸ்லோ என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள்தானே.

இங்கே நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது பேர்கன் நகரில் உள்ள Bryggen என்றழைக்கப்படும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். இது மிகவும் பழமை வாய்ந்த கட்டடத் தொகுப்பு அல்லது குடியிருப்பு ஆகும். அதை "counting house" என்று அழைக்கின்றார்கள். இந்த இடமானது UNESCO னால் 1972 இல் உருவாக்கப்பட்ட 'பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்களின் பட்டியல்' இல் 1979 ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.


இந்த Bryggen கட்டடத் தொகுப்பில் காலத்துக்கு காலம் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டாலும், இது ஒரு பரம்பரைச் சொத்தாக கணிக்கப்பட்டு, அதே பழைய நிலையில் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றது.



இந்த கட்டடத் தொகுதி 1070 ஆம் ஆண்டளவில் நோர்வேஜிய மக்களால் கட்டப்பட்டு இருந்தாலும் (இதுவரை நாளும் நான் இந்த கட்டடங்கள் ஜேர்மனியர்களால் கட்டப்பட்டவை என்று தவறாக எண்ணியிருந்தேன்), 1360 - 1764 காலப் பகுதியில் அந்த இடம், ஜேர்மனியர்கள் வசம் இருந்தபோது மிகவும் பிரசித்தமடைந்து இருந்தது. 1360 ஆம் ஆண்டில் நோர்வேயை ஆண்ட ஒரு டென்மார்க் அரசனால், Hanseatic League என்றழைக்கப்பட்ட, ஜேர்மனிய வர்த்தகர்களின் கட்டுப் பாட்டுக்குள் நோர்வேயின் வியாபாரம் வந்து சேர்ந்தது. அப்போது இந்த குடியிருப்பு பகுதியும் அவர்களிடம் வந்தது. 1764 இல் நோர்வேஜிய அரசனால், மீண்டும் நோர்வேஜிய வர்த்தகர்கள் வசம் அந்த வர்த்தக முக்கியத்துவம் பெற்ற இடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் இந்த இடத்தை தமது வியாபார நோக்கத்திற்கு பாவித்து வந்தனர். இந்த கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கடல்நீரேரி வருவதனால், பெரிய கப்பல்களும் நேரடியாக, கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கொண்டு வரப்பட்டு வியாபாரிகளுக்கு இலகுவாக இருந்தது. பேர்கன் மிக முக்கிய பண்டமாற்று வியாபாரத் தலமாக அமைந்திருந்தது. நோர்வேயில் இருந்து உலர் மீன்கள் (dry fish) அதிகளவில் வெளிநாடுகளுக்கு சென்றது. இந்த உலர் மீன்கள் உப்பு சேர்க்கப்படாமல், காற்றில் உலர்த்தப் பட்டு பெறப்படுபவை. (1980 ஆம் ஆண்டளவில் எண்ணெய்வளம் கண்டு பிடிக்கப்படும்வரை, நோர்வேயின் பொருளாதாரம் மீனிலும், கப்பல் கட்டும் தொழிலிலுமே தங்கி இருந்தது).


பின்னர் இந்த கட்டடத் தொகுதி ஜேர்மனியர்கள் வசமானது. ஹன்சியன்ஸ் என்றழைக்கப்படும் ஜேர்மனிய வர்த்தகர்கள் தமது அலுவலகத்தை இந்த கட்டடத்தில் வைத்திருந்ததுடன், ஜேர்மனிய வியாபாரிகளே இந்த குடியிருப்புக்களில் இருந்தனர். ஒவ்வொரு கட்டடத் தொகுதியிலும் 10 தனி வீடுகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் 10 வேலை பழகுபவர்கள் (13 வயது வந்த சிறுவர்களே apprentices ஆக அழைத்து வரப் படுவார்கள்) இருப்பார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முகாமையாளர் இருப்பார். ஒரு கட்டடத் தொகுதிக்கு ஒரு சொந்தக்காரர் இருப்பார். அவர் மட்டும் திருமணம் செய்து ஜேர்மனில் வசிப்பார். மற்ற எவரும் திருமணம் செய்யாதவர்கள். எனவே இந்த முழுமையான கட்டடத் தொகுதியில், முற்று முழுவதுமாய் ஆண்கள் மட்டுமே வசித்து வந்தார்கள். பெண்களுடன் பேசுவதற்கு கூட தடை உண்டாம். முக்கியமாக நோர்வேஜிய பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால், முகாமையாளராக இருந்தாலும், அதற்கு தண்டனை உண்டு. முகாமையாளருக்கு அதி குறைந்த தண்டனை எல்லோருக்கும், ஒரு அண்டா பியர் (barrel bear) வாங்கிக் கொடுப்பது. தொழில்பழகும் இளவயதினருக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுமாம்.


இந்த கட்டடங்கள் முற்றிலும் பலகைகளால் ஆனதாய் இருப்பதனால், இங்கே எதையும் சூடாக்கவோ, விளக்குகள் வைத்திருக்கவோ, மெழுகுதிரி வைத்திருக்கவோ அனுமதி இருக்கவில்லை. அனைவரின் வீட்டிலும் தீயணைப்பதற்காக கட்டாயமாக தண்ணீர் கலன் இருக்க வேண்டும். குளிர் காலங்களில் அனேகமானோர் பின்னே இருக்கும் ஓய்வறையிலேயே அதிக நேரத்தை செலவளிப்பார்கள். அந்த காலங்களில் வியாவாரமும் மிகவும் மந்த நிலையிலேயே நடைபெறும். ஒவ்வொரு குடியிருப்பிலும் அமைந்திருக்கும் 10 வீடுகளுக்கும் பொதுவான ஓய்வு வீடு ஒவ்வொரு குடியிருப்பின் பின் பக்கம் அமைந்திருக்கும். அந்த ஓய்வறை கல்லால் ஆனது. அங்கே வேலை பழகுபவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதுடன், கூட்டங்களும் நடத்தப்படும். சமையல் செய்வதற்கென ஒவ்வொரு குடியிருப்பின் பின் பகுதியிலும் பொதுவான, தனியான சமைக்கும் வீடு கட்டப்பட்டிருக்கும். எத்தனை பாதுகாப்புடன் இருந்தாலும், காலத்துக்கு காலம் இந்த குடியிருப்பு நெருப்பின் தாக்கத்துக்கு உட்படுவதும், மீள அமைக்கப்படுவது நடந்திருக்கின்றது.

ஒவ்வொரு குடியிருப்புக்கும் பொதுவான மலசல கூடம் (ஒன்றே ஒன்றுதான் அத்தனை பேருக்கும்), குடியிருப்புக்கு முன்பாக, கடலை அண்டி இருக்கும். அவற்றை நகரின் அழகு கருதி, பின்னர் அகற்றி விட்டடர்கள். அங்கே வெளிப்புறத்தில் சரக்குகள் இறக்கி வைப்பதற்கான கட்டடமும் உண்டு. தற்போது அந்த இடம் அதே பழைய நிலையில் இருந்தாலும், அந்த கட்டடத் தொகுதியின் பகுதிகள், உல்லாசப்பயணிகளுக்கான பொருட்கள் விற்கப்படும் கடைகளால் நிறைந்து இருக்கின்றது.