நோர்வே - 2
முந்தைய எனது பதிவில் பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் நோர்வேயும் ஒன்றா என்ற கேள்வியை gl கேட்டிருந்தார்.
நீண்ட காலமாக கப்பல்துறை நோர்வேயின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை கொண்டிருந்தது. ஆனால் நோர்வேயின் இயற்கை வளங்களே தற்போதைய அதி உயர் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. பெற்றோலிய வளமும், நீர்மின்னியல் சக்தி, மீன் வளமும் இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நோர்வே பொருளாதாரத்தில் பாலுற்பத்தி உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பில் வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.
நோர்வேயில் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாகவே உள்ளது. பெற்றோலும், மீனும் கூட, நோர்வே அவற்றை ஏற்றுமதி செய்து அனுப்பும் நாடுகளில் உள்ள விலையை விட அதிகம் என்றால் பாருங்களேன் :). அமெரிக்காவின் வாழ்க்கைச் செலவை விட 30% அதிகமாக நோர்வேயில் வாழ்க்கைச் செலவு இருக்கின்றது என்று ஒரு கணிப்பீடு சொல்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக, நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக கருதப் படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான சில கூட்டு முயற்சிகளில் பங்கேற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் முழுமையாக நோர்வே இணைந்து கொள்வதை நோர்வேஜிய மக்கள் விரும்பவில்லை என்பதை ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் காட்டியுள்ளார்கள்.
தனி மனிதனுக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product per capita, or GDP per capita) உலக நாடுகளில் இரண்டாவது இடத்தை நோர்வே கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வேலையில்லாப் பிரச்சனை மிகவும் குறைவாகவே (3% ஐ விட குறைவு) உள்ளது. அத்தோடு, நோர்வேஜிய சமூகம் வேலைக்கான ஊதியத்தில் மக்களிடையே அதிக வேறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்கின்றது. அதி குறைந்த ஊதியம் பெறுபவருக்கும், அதி கூடிய ஊதியம் பெறுபவருக்கும் இடையில், நிகர வருமானத்தில் (net income) வேறுபாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. (அதிகம் உழைத்தால் வரியை கூட்டோ கூட்டென்று கூட்டி, ஒரு வழி:) )க்கு கொண்டு வந்துடுவாங்க.
குழந்தைகளுக்கான உரிமை, நலன், மற்றும் பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள் நலனை பேணிப் பாதுகாப்பதிலும் நோர்வே முன்னணியில் இருக்கின்றது. தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. தவறு செய்பவர்களுக்கு, சட்ட நடைமுறைகள் முடிந்து, அதிகார பூரவமாக தண்டனை தீர்ப்பு வரும்வரை, எந்த ஒரு தண்டனையும் வழங்கப்படக் கூடாது என்று சட்டம் இருக்கின்றது. (அட சிறிய தவறுக்கு கிடைக்கும் சிறிய தண்டனைகளில், தண்டனைக்கு உட்படுபவரே எந்த நாட்களில் சிறையில் இருப்பது என்பதை தீர்மானிக்க அனுமதிக்கப்படுவார். வெளியிலே இருக்கிறது bore அடிச்சா, உள்ளே போய் சில நாட்கள் இருந்து விட்டு வரலாம், ஹி ஹி. சிறையில் தொலைக்காட்சி, கணினி, தொலைபேசி உட்பட எல்லா அடிப்படை (???) வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றதாம். உடனே நான் அங்கே இருந்து பார்த்தேனா ன்னு கேட்காதீங்க. எல்லாம் காது வழி கேட்ட செய்திதான்).
அட, நான் என்னவோ 'நடு இரவுச் சூரியன்' பத்தி எழுதுறதா சொல்லிட்டு, என்னென்னவோ எழுதிக்கொண்டு போகின்றேன். சரி விடுங்க. அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Friday, May 04, 2007
நாடு நல்ல நாடு - நோர்வே 2
Posted by கலை at 5/04/2007 03:54:00 PM
Labels: நாடு நல்ல நாடு
Subscribe to:
Post Comments (Atom)
Comment Form under post in blogger/blogspot