Thursday, May 31, 2007

நகரில் அலைந்தோம்!

நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக இருந்தது. ஆனால் நான் பரவாயில்லை. சில பேர்கன்வாசிகளே, இந்த சரித்திர வரலாற்றை நேற்றுத்தான் சரியாக தெரிந்து கொண்டதாக கூறியபோது, அட, நாம பரவாயில்லையே என்று தோன்றியது :).

தொடரின் கடைசிப் பகுதியில், கடைகோடித் தமிழன் "இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே" என்று முன்மொழிய, அதை பொன்ஸ் வழி மொழிந்திருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதுவதன் மூலம், அவர்கள் ஆசையையும் கொஞ்சம் பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகின்றது :).

நேற்று மாலை Byen med paraply யில் (Byen med paraply = The town with umbrella = Bergen) வழிகாட்டிகளின் துணையுடன் ஒரு சின்ன Byvandring = town wandering = நகர அலைச்சல் = நகர் உலா :) க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் பேர்கனில் இருப்பவர்களுக்கு நகரத்தில் 'என்னத்தை பெருசா சுற்றிக் காட்டப் போறாங்க' என்று ஒரு சின்ன ஏளனத்தோடு நினைத்தேன். இருந்தாலும், 'அப்படி என்னதான் காட்டுறாங்க பார்ப்போமே' என்ற எண்ணத்தில் போனேன். போனதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நகர் சுற்றிப் பார்த்து முடிந்ததும், இரவு உணவும் இருக்கு என்று சொல்லியிருந்தார்கள் :). போய் வந்த பின்னர் இத்தனை அருகில் இருந்தும், எவ்வளவு விஷயம் இத்தனைநாள் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.

நேற்று நல்ல காலநிலை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்தும், அந்த நேரத்தில் மழையும், குளிரும் ஆரம்பித்து விட்டது. பேர்கனில் இருந்துகொண்டு மழைக்குப் பயந்தால் முடியுமா என்று விட்டு அனைவரும் நடக்கத் தொடங்கியாச்சு. நல்ல காலநிலையை எதிர் பார்த்திருந்ததால், மழைக்கேற்ற, குளிருக்கேற்ற ஆடைகள், காலணிகள் அணியாததால், குளிரில் நடுங்கி, விறைத்துப் போக வேண்டி வந்து விட்டது. ஆனாலும் வழிகாட்டியின் சுவாரசியமான தகவல்களைக் கேட்டுக் கொண்டே நகர் அலைந்து முடித்தாயிற்று. அந்த சுவாரசியமான தகவல்கள் அடுத்த நோர்வே -7 பதிவில் வரும்.

நம்ம பேர்கன் நகரத்துக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. The city with Rhododenrons. பேர்கன் நகரின் மிதமான காலநிலை, ஈரப்பதன் என்பன இந்த Rhododenrons க்கு மிகவும் உகந்ததாக அமைந்திருப்பதால், வசந்த காலத்தில் இந்த பூக்கள் பேர்கன் நகரின் பல பகுதிகளிலும் சிரித்துக் கொண்டிருக்கும்.



நமது நகர் அலைச்சல் முடிந்ததும், மிக தொன்மையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதியில், வரலாற்றுப் பதிவுகளை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பகுதியில் இரவு உணவை அருந்தினோம்.

சரி வரலாறு அடுத்த பகுதியில் வரும். அப்போ இந்த பதிவு எதுக்கா? சும்மா ஒரு முன்னோட்டம்தான் :).