Thursday, September 13, 2007

மதம் பிடிக்காதவர்கள்!!

மதம் பிடிக்காதவர்கள்!

மகளின் பாடசாலையில் அன்று பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம். 'ஆரம்ப வருட திட்டம்' (primary Year program) பற்றி விளக்கம் தந்தார்கள். பாடசாலையில் ஆரம்ப வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான திட்டம் இது. அவர்களது தொடர்ச்சியான, முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக இந்த திட்டம் ஒரு சில வருடங்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு பாடங்களை வெறுமனே கற்பித்துவிட்டுச் செல்லாமல், கூட்டாக கேள்விகள் கேட்டு பதில் பெறும் முறை மூலம், குழந்தைகளின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூகவியல், பெளதீகவியல், மனவியல் ரீதியாக தேவைகளைத் தெரிந்து, அவர்களது அறிவை வளர்ப்பது இலகுவானது என்று சொன்னார்கள். தொடர்ந்து விரைவாக மாறிக் கொண்டு வரும் இந்த உலகத்தில், அவர்கள் தமது திறமைகளை வெறும் பாடப் புத்தகங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை திறமையுடன் எடுத்துச் செல்லவும், சமூகத்தில் அவர்களது பங்களிப்பை சரியான முறையில் செய்யவும் இந்த திட்டம் உதவும் என்று சொன்னார்கள்.

ஒரே குறிப்பிட்ட தலைப்பில், ஒவ்வொரு வகுப்பின் தரத்திற்கும் ஏற்ப, ஓரிரு மாதங்கள், வெவ்வேறு பாடங்களையும், அந்த தலைப்புக்கு தொடர்புபடுத்தி, பாடங்களை சேர்ந்து உருவாக்குதலே இந்த திட்டத்தின் நோக்கம். உதாரணத்துக்கு, 'உலக வெப்பமயமாதல்' என்ற தலைப்பில், ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் ஏற்ற தரத்தில், அவர்களுக்கு புரியக் கூடிய வகையில், அந்த வயதுக் குழந்தைகளின் தொழிற்பாடுகளை அடிப்படையாக வைத்து, அவர்களது பங்களிப்புடன் கற்பித்தலை ஒழுங்கு செய்தல்.

இதில் பெற்றோர்களும், தமக்கு தெரிந்த விடயங்கள் பற்றி, அல்லது தங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுடன் பாடசாலை நேரத்தில் போய் பங்களிப்பு செய்யலாம். தவிர, பெற்றோர்களுக்கு முதலே கொடுக்கப்படும் அந்த தலைப்பின் அடிப்படையில், தங்கள் குழந்தைகளுடன் நாளாந்த நடவடிக்கைகளின் போது அதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

முன்னோட்டம் போதும். இதில் என் மனதில் பதிந்த, சொல்ல வந்த விடயத்துக்கு வருகின்றேன். :)

அதில் இந்த வருடத்துக்கான தலைப்புகளில் ஒன்று, 'உலகிலுள்ள மதங்கள்'. இந்த விடயம் சம்பந்தமாக, பெற்றோர்களும் வந்து வகுப்பில், குழந்தைகளுக்கு வெவ்வேறு மதங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று ஆசிரியை கூறினார். அப்படி வந்து வகுப்பில் பகிர்ந்து கொள்ளும்போது, அது மதப் பிரச்சாரமாக அமையாமல், ஒவ்வொரு மதங்கள் பற்றிய வெறும் அறிமுகமாக அமைய வேண்டும் அன்பதை வலியுறுத்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.


மதங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசியபோது, அதிக வீதத்திலான குழந்தைகள், தான் எந்த மதம் என்று தெரியாது என்றோ, அல்லது தான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என்றோ கூறினார்களாம். அது மட்டுமல்ல, அப்படி அதிக வீதமான குழந்தைகள் கூறியது தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது என்றும் சேர்த்துக் கூறினார். நான் பல பெற்றோர்களின் முகத்தையும் பார்த்தேன். அநேகமானோரின் முகத்தில் அதே ஆறுதல் தெரிந்தது போல் இருந்தது.

மதத்தின் பெயரில் நடக்கும் குளறுபடிகளைப் பார்த்தால், இப்படி மதம் பிடிக்காத மனிதர்கள் அதிக அளவில் வருவது நன்மைக்கே என்று தோன்றுகின்றது. :)