Monday, November 19, 2007

என் குட்டி சினேகிதி!

என் பிரியமான குட்டி சினேகிதி!

நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு (நல்ல வேளையாய் வீசவில்லை), வீட்டுச் சாவியை தேடிப் பிடித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, பஸ்ஸில் ஏறியாச்சு.

இடம் தேடி அமர்ந்ததும், மீண்டும் அந்த காகிதத் துண்டு நினைவில் வந்தது. அதை தேடி எடுத்துப் பார்த்தால், அதில் இப்படி இருந்தது. :)


ஆஹா, என் குட்டித் தேவதையினுடைய வேலைதான் என்று எண்ணியபடியே, மறு பக்கத்தைப் பார்த்தேன். அங்கே இந்த sticker ஒட்டி இருந்தது. :)

:) எனக்கு புரிந்து போனது. அன்றொருநாள், இந்த குட்டி, எனது பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே சோதனைக்குட்படுத்தி, என்னைக் கொஞ்சம் கோபப்படுத்திய பிறகு, அவசரம் அவசரமாக ஓடிப் போய், இரண்டு stickers எடுத்து வந்து என்னுடைய பையில் ஒட்டினாள். ஒரு smiley face sticker ஒட்டிக் கொண்டது. மற்றது ஒட்டவில்லை. ஒட்ட முடியாமல் போன அந்த மற்ற sticker தான், எனது கைப்பையினுள், அவளது சொந்தக் கையெழுத்துடன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

Saturday, October 20, 2007

முதிர்ந்த பதிவர்!

முதிர்ந்த வலைப் பதிவர்!

உலகிலேயே வயது முதிர்ந்த வலைப்பதிவர் யார் தெரியுமா? அவுஸ்திரேலியப் பெண்மணி Olive Riley. இந்த மாதம் 17 ஆம் திகதி அவர் தனது 108 ஆவது வயதை எய்தினார். மூன்று நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவரரென்ற பெருமையை பெற்றிருக்கும் இவர், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் The Life of Riley என்ற பெயரில் வலைப் பதிவு செய்து வருகின்றார்.

அவரது பதிவு உலகளவிலான அதிகளவு வாசகர்களை கொண்டிருக்கிறது. அவரது பதிவால் கவரப்ப்பட்ட ஒரு ஸ்பானியர், அவரது பதிவை ஸ்பெயின் மொழியில் மாற்றி அமைத்தி வருகின்றாராம்.

அவருக்கு வலைப் பதிவு செய்வதில் உதவி வரும் Mike Rubbo, Olive Riley யை active ஆக வைத்திருக்கவே தான் விரும்புவததகவும், inactivity என்ற காரணத்தால் அவர் இறந்து போகக் கூடாது என்றும் கூறுகின்றார்.

அவரது பிறந்த ந்ஆளுக்கு முதல் இந்த படிவை போட வேண்டும் என்றிருந்தேன். ஆனால் நேரமின்மையால் பின் தள்ளி விட்டது. இருந்தாலும் அந்த ம்உதிய பதிவருக்கு எனது வாழ்த்துக்கள். :)

Monday, October 01, 2007

மூட நம்பிக்கையும், அதன் பலனும்??

நேற்று ஒருவர் சொன்ன கதை இங்கே........

ஒரு வயதானவருக்கு (எனக்கு இந்த கதை சொன்னவரின் அப்பாதான் அந்த வயதானவர்) அடிக்கடி உடல் சுகவீனமாகிக் கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கும் சென்று வரவேண்டி இருந்தது. அவரும், அவரது மனவியும் இப்படி அடிக்கடி உடல்நிலை குன்றிப் போவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்களாம். அதற்கு ஒரு 'மை' போட்டுப் பார்ப்பவரிடம் போனார்களாம்.

இந்த வயோதிபரின் குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் சொன்னாராம், "உங்களுடைய கோவிலில் இருக்கும் கடவுள் வைரவரை ஒருவர் கட்டி வைத்திருக்கிறார். அதனால் வைரவர் தனது சக்தியை பயன்படுத்தி, உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கின்றார். அதனால்தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி உடல்நலமற்றுப் போகின்றது. இதை சரி செய்ய, அந்த கட்டி வைத்திருப்பவர் செய்திருக்கும் செய்வினையை கண்டு பிடித்து அகற்ற வேண்டும்".

(உடனே நான் கேட்டேன், "மனிதனால் ஒரு கடவுளை கட்டி வைக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கவில்லையா" என்று. அதற்கு அவர், "நான் சொல்லும் கதையை முழுவதுமாய் கேளுங்கோ" என்று சொல்லி தொடர்ந்தார்.)

அந்த மை போட்டுப் பார்ப்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, செய்வினை செய்து புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து அகற்ற வேண்டும் என்று சொன்னாராம். அவர்களுக்கு உதவியாக (புதைத்து வைக்கப்பட்டிருக்கும் செய்வினையை தோண்டி எடுத்து அகற்றுவதற்கு) பக்கத்து வீட்டிலிருப்பவரை கூட்டிக் கொண்டார்களாம். மை போட்டுப் பார்ப்பவர் வந்து, அந்த காணி முழுவதும் சுற்றித் திரிந்து, செய்வினை புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அந்த இடத்தை தோண்டச் சொல்லி, அங்கிருந்து ஏதோ சில பொருட்களை அகற்றினார்களாம். மை போட்டுப் பார்ப்பவருக்கு பணமும் கொடுத்து அனுப்பினார்களாம்.

அந்த வயதானவருக்கு அதற்குப் பின்னர் எந்த உடல்நலக் குறைவும் வரவில்லையென்றும், தன்னால் இப்போது துவிச்சக்கர வண்டி ஓட்டிக் கொண்டு செல்லக் கூட முடிகின்றது என்றும் ஆனந்தமாக கூறுகின்றாராம்.
இந்தக் கதையை என்னிடம் சொன்னவர் சொல்கின்றார். அந்த வயதானவருக்கு, அந்த மை போடுபவர் சொன்னதில் இருந்த முழுமையான நம்பிக்கை, அவரை சுகமானவராக்கி வைத்திருக்கின்றது. அது தற்காலிகமானதாக இருந்தாலும், அவர் கொஞ்ச நாளைக்கு, சந்தோஷமாகவும், உடல்நலத்துடனும் இருக்கப் போகின்றார். அந்த வயதான தம்பதிகளிடம் நிறைய பணம் இருக்கின்றது. அந்த மை போட்டுப் பார்ப்பவருக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள். அதனால் அந்த பணம், அந்த மை போடுபவரின் குடும்பத்தினரின் பாவனைக்கு போய் சேருகின்றது. அதுவும் நல்லதுதானே என்று. இவருக்கும் சுகம், அவர்களுக்கும் தேவையான பணம்.

இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று யோசிக்கின்றேன். :^)

Friday, September 21, 2007

ஜோதிடம்!

அன்றைக்கு சாப்பிட உட்கார்ந்தபோது வழமை போலவே டிவி பார்க்கலாமே என்றெண்ணி அதை போட்டேன். (சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது கூடாத பழக்கமாம், சொல்கின்றார்கள். ஆனால் அதை கேட்டு நடக்க என்னால் முடியவில்லை). அதில், ஒரு நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. வழமை போலவே, என்ன ஏது என்று புரியாமலே நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன்.
அது ஒரு அமெரிக்க நிகழ்ச்சி. இருவர் மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் நிகழ்ச்சி நடத்துனர், மற்றவர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஒரு அமெரிக்க பெண்மணி.

அழைக்கப்பட்டிருந்த ஏனைய மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பார்வையாளர்களில் ஒருவர் தனது வாழ்க்கையில் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விடயம் சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்க, அந்த பெண்மணி உடனேயே பதில் சொன்னார். அட, 'அமெரிக்காவிலே டிவியில் வந்து நேரடி ஜோதிடம் சொல்லுறாங்க போலிருக்கே' என்று கொஞ்சம் ஆர்வமாக பார்த்தேன்.

அடுத்து ஒரு சிறுபெண் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்து, "எனக்குரியவரை நான் எப்போது காண்பேன்?" என்று கேட்க, அந்த பெண்மணியும் உடனடியாக, "உன்னுடையவரின் பெயர் Jack. அவரை நீ இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கண்டு பிடிப்பாய்" என்று சொன்னார். பாவம் அந்தப் பெண், இன்னும் இரண்டு வருடத்துக்கு, Jack என்ற பெயருடன் காணும் ஆண்களை எல்லாம் கண்டு குழம்பப் போகின்றாள்.

அடுத்து எழுந்த ஒரு நடுத்தர வயதான பெண்மணி, "என்னைச் சுற்றி எப்போதும் தேவதைகள் இருப்பதை நான் உணர்கின்றேன்" என்று சொல்ல, அந்த ஜோதிட பெண்மணி, "எல்லோரை சுற்றியும் 5 அல்லது 6 தேவதைகள் எப்போதுமே இருக்கும்" என்று சொல்ல, அந்த பெண்மணி, "என்னைச் சுற்றி இருக்கும் தேவதைகளை உன்னால் இப்போது பார்க்க முடிகின்றதா" என்று சீரியசாக கேட்க, அவரும், "ஆம், பார்க்கிறேன்" என்று அதை விட சீரியசாக ஒரு பதில் சொல்கின்றார். "அப்படியானால், அந்த தேவதைகள் சொல்வதையெல்லாம் நான் செய்தால் தப்பில்லைத்தானே" என்று அந்த பெண்மணி கேட்க, இவர் "இல்லை, அவர்கள் சொல்வது போலவே நீ எல்லாம் செய்யலாம்" என்று பதில் கொடுத்தார். ஏதாவது தப்புக்கள் செய்யாமல் இருந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்ததாக ஒரு ஆண் எழுந்து, "நான் என்னுடைய வீட்டை விற்க வேண்டும். விற்க முடியுமா?" என்று கேட்க, "ஆம், நீ ஒரு நல்ல வீடு விற்றுக் கொடுப்பவரை உடனடியாக சந்திக்க வேண்டும்", என்று பதில் தந்தார்.
உடனே நிகழ்ச்சி நடத்துனர், "நானும் என்னுடைய வீட்டை விற்பதாக இருக்கிறேன். எப்போ விற்பேன்?" என்று கேட்க, "இன்னும் 7 கிழமைக்குள் விற்று விடுவாய்" என்று பதில் சொன்னார். நடத்துனரின் முகத்தில் சந்தோஷம்.

அடுத்ததாக எழுந்த ஒரு இளைஞன், "அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வியை முன் வைத்தான்" (எனக்கென்னவோ அவன் ஒரு நக்கலா கேட்ட மாதிரித்தான் இருந்தது). அதற்கு "எனக்கு யார் என்று தெரியாது. ஆனால் யார் வந்தாலும், இப்ப இருப்பதைவிட நல்ல நிலமை உருவாகும்" என்று சொன்னார். பொதுவான, பெரிய விடயங்களில் ஜோதிடம் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை போலும். :)

நடத்துனர் தன்னுடைய வீட்டை நிச்சயமாக 7 கிழமைக்குள் விற்று விட முடியுமா என்று மீண்டும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

எப்படித்தான் மற்றவருடைய எதிர் காலத்தை அப்படியே பட்டு பட்டென்று (எந்த ஒரு பொருளோ, புத்தகமோ அவரிடம் இல்லை) சொல்கின்றாரோ தெரியவில்லை. சும்மா உட்கார்ந்த படியே, அதுவும் டக் டக்கென்று பதில் சொல்லி அனைவரையும் அசத்தி விட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
நான் பார்க்க தொடங்கியபோதே நிகழ்ச்சி முடிவை நெருங்கி விட்டிருந்தது. அதனால் முழுமையாகப் பார்த்து சிரிக்க முடியவில்லையே என்ற கவலையுடன் நானும் எழுந்து விட்டேன். உலகில் எல்லா இடத்திலும், எல்லா மாதிரியான ஆட்களும் இருப்பார்கள் போல இருக்கு :)

Thursday, September 13, 2007

மதம் பிடிக்காதவர்கள்!!

மதம் பிடிக்காதவர்கள்!

மகளின் பாடசாலையில் அன்று பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம். 'ஆரம்ப வருட திட்டம்' (primary Year program) பற்றி விளக்கம் தந்தார்கள். பாடசாலையில் ஆரம்ப வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான திட்டம் இது. அவர்களது தொடர்ச்சியான, முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக இந்த திட்டம் ஒரு சில வருடங்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு பாடங்களை வெறுமனே கற்பித்துவிட்டுச் செல்லாமல், கூட்டாக கேள்விகள் கேட்டு பதில் பெறும் முறை மூலம், குழந்தைகளின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூகவியல், பெளதீகவியல், மனவியல் ரீதியாக தேவைகளைத் தெரிந்து, அவர்களது அறிவை வளர்ப்பது இலகுவானது என்று சொன்னார்கள். தொடர்ந்து விரைவாக மாறிக் கொண்டு வரும் இந்த உலகத்தில், அவர்கள் தமது திறமைகளை வெறும் பாடப் புத்தகங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை திறமையுடன் எடுத்துச் செல்லவும், சமூகத்தில் அவர்களது பங்களிப்பை சரியான முறையில் செய்யவும் இந்த திட்டம் உதவும் என்று சொன்னார்கள்.

ஒரே குறிப்பிட்ட தலைப்பில், ஒவ்வொரு வகுப்பின் தரத்திற்கும் ஏற்ப, ஓரிரு மாதங்கள், வெவ்வேறு பாடங்களையும், அந்த தலைப்புக்கு தொடர்புபடுத்தி, பாடங்களை சேர்ந்து உருவாக்குதலே இந்த திட்டத்தின் நோக்கம். உதாரணத்துக்கு, 'உலக வெப்பமயமாதல்' என்ற தலைப்பில், ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் ஏற்ற தரத்தில், அவர்களுக்கு புரியக் கூடிய வகையில், அந்த வயதுக் குழந்தைகளின் தொழிற்பாடுகளை அடிப்படையாக வைத்து, அவர்களது பங்களிப்புடன் கற்பித்தலை ஒழுங்கு செய்தல்.

இதில் பெற்றோர்களும், தமக்கு தெரிந்த விடயங்கள் பற்றி, அல்லது தங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுடன் பாடசாலை நேரத்தில் போய் பங்களிப்பு செய்யலாம். தவிர, பெற்றோர்களுக்கு முதலே கொடுக்கப்படும் அந்த தலைப்பின் அடிப்படையில், தங்கள் குழந்தைகளுடன் நாளாந்த நடவடிக்கைகளின் போது அதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

முன்னோட்டம் போதும். இதில் என் மனதில் பதிந்த, சொல்ல வந்த விடயத்துக்கு வருகின்றேன். :)

அதில் இந்த வருடத்துக்கான தலைப்புகளில் ஒன்று, 'உலகிலுள்ள மதங்கள்'. இந்த விடயம் சம்பந்தமாக, பெற்றோர்களும் வந்து வகுப்பில், குழந்தைகளுக்கு வெவ்வேறு மதங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று ஆசிரியை கூறினார். அப்படி வந்து வகுப்பில் பகிர்ந்து கொள்ளும்போது, அது மதப் பிரச்சாரமாக அமையாமல், ஒவ்வொரு மதங்கள் பற்றிய வெறும் அறிமுகமாக அமைய வேண்டும் அன்பதை வலியுறுத்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.


மதங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசியபோது, அதிக வீதத்திலான குழந்தைகள், தான் எந்த மதம் என்று தெரியாது என்றோ, அல்லது தான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என்றோ கூறினார்களாம். அது மட்டுமல்ல, அப்படி அதிக வீதமான குழந்தைகள் கூறியது தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது என்றும் சேர்த்துக் கூறினார். நான் பல பெற்றோர்களின் முகத்தையும் பார்த்தேன். அநேகமானோரின் முகத்தில் அதே ஆறுதல் தெரிந்தது போல் இருந்தது.

மதத்தின் பெயரில் நடக்கும் குளறுபடிகளைப் பார்த்தால், இப்படி மதம் பிடிக்காத மனிதர்கள் அதிக அளவில் வருவது நன்மைக்கே என்று தோன்றுகின்றது. :)

Friday, September 07, 2007

என்னன்னு பாத்து சொல்லுங்க!நடந்து வந்து கொண்டிருந்தபோது (இங்கே நோர்வேயில்தான்), நிலத்தில் ஒரு காகித்ததாள் கிடந்தது. என்ன என்று எடுத்துப் பார்த்தால் அதில் இப்படி இருந்தது. இரு பக்கத்தையும் ஸ்கான் செய்து போட்டிருக்கிறேன். பெரிதாக்கிப் பார்த்துவிட்டு, அந்தப் படத்தில், பல தலைகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Friday, July 06, 2007

வெறும் கனவா?

இது கனவா?

பொதுவாக நான்தான் இரவு முழுவதும் கனவுகள் காண்பதும், அதில் நினைவிருக்கும் கனவை (அனேகமாக கண் விழிக்கும்போது கண்டு கொண்டிருந்த கனவாக இருக்கும்), அதை காலை எழுந்ததும் சொல்லுவதும் வழக்கம். இப்போதெல்லாம் அப்படி சொல்வதை கூட விட்டு விட்டேன்.

மூன்று நாட்கள் முன்னால், வழக்கம்போல் லேட்டாக (லேட்டுக்கு காரணம் மகளுக்கும், கணவருக்கும் லீவு விட்டாச்சு) காலையில் எழுந்து வேலைக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். லீவுதானே, மற்றவர்கள் நன்றாக தூங்கி எழும்பட்டும் என்ற நல்லெண்ணத்தில் (நான் எழுந்து போக வேண்டியிருக்கே என்று உள்ளுக்கு கொஞ்சம் எரிச்சல்தான்) சத்தம் அதிகம் போடாமல் தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஆனால் கணவரும் எழுந்து வந்தார். அவர் என்னிடம் கேட்டார் "என்ன புதினம்?". 'காலங்காத்தால இது என்ன கேள்வி' என்று இந்தக் கேள்வி ஆச்சரியத்தை தந்தாலும், அவசரமாய் வேலைக்கு புறப்பட வேண்டி இருந்ததில் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை. அதனால் நான் கடைசியாக கண்டிருந்த அன்றைய கனவை சொன்னேன். ஒரு பெரிய முதலையை எங்கள் வீட்டு குளியலறையில் கொண்டு வந்து கட்டி வைத்திருக்கிறோம். அந்த முதலையின் வாயே குளியல் தொட்டியை விடப் பெரிது. அது எப்படி அந்த தொட்டிக்குள் இருக்கிறதென்பதெல்லாம் தெரியாது. :)

நான் கனவு சொல்லும்போது "வேறு வேலையில்லை." என்று திட்டுபவர், பேசாமல் நான் சொன்ன கனவை கேட்டுவிட்டு, அவரும் ஒரு கனவு சொன்னார். அவர் கண்ட கனவில் ஒரு பாலத்தின் அருகில் கார் விபத்து நடந்ததாகவும், அந்த காரின் ஒரு பக்க சில்லுகள் இரண்டும் மேலே எழுந்து இருந்ததாகவும் சொன்னார். நான் கனவுகளையும், நிஜமான நிகழ்வுகளையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை என்றதால் அப்படியே அந்த கதையை விட்டு விட்டு சென்று விட்டேன்.

அன்று மாலை லண்டனில் இருக்கும் ஒரு தம்பிக்கு தொலைபேசினேன். அப்போது அவர்கள் சொன்னது மிகவும் ஆச்சரியமான விடயம். அன்று காலையில் அவருக்கு எனது கணவர் கனவில் கண்டது போன்ற அதே நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. அவர் high way யில் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி, இரு சில்லுகளும் மேலெழுந்து, பாதையின் ஒரு புறம் இருந்து மறு புறத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. நல்ல வேளையாக அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பொலீஸ் அவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்தார்களாம். வாகனம், முழுமையாக சரிந்து பாதையில் இழுபட்டுக் கொண்டு சென்றும்கூட, அவர்கள் உயிர் தப்பியிருப்பது மிகவும் ஆச்சரியப் படக்கூடிய விடயம் என்று சொன்னார்கள். அந்த விபத்தை நேரில் கண்ட அனைவரும் மிகவும் ஆச்சரியப் பட்டார்களாம். லண்டனில், அந்த high way யில், மிகப் பெரிய வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் அந்த காலை வேளையில் அப்படி ஒரு விபத்து நடந்தும், இவர்களது வாகனம் தவிர, வேறு எந்த வாகனமும் அடித்துக் கொண்டு சேதப்படாமல், இவர்களும் உயிர் தப்பியது மிகவும் ஆச்சரியம் என்று பொலீஸ் உட்பட அனைவரும் சொன்னதாகச் சொன்னார்கள்.

இதில் என்னுடைய ஆச்சரியம், எப்படி அதே போன்ற கனவு, கிட்டத்தட்ட, அதே நேரத்தில் என் கணவருக்கு வந்தது என்பதுதான். எனது பாட்டியார் இறந்த ஒருநாள் அதிகாலையில், பல மைல் தொலைவில் இருந்து படித்து வந்த எனக்கு, நானே இறந்து போனதாகவும், என்னை சுற்றி பலர் நின்று அழுவதாகவும் நான் கண்ட கனவும் இப்போ நினைவுக்கு வருகின்றது. அன்று முழுவதும் நான் என்னவென்று புரியாத ஒரு மனக் கஷ்டத்தில் இருந்ததும், அன்று மாலை, பாட்டி இறந்த செய்தி என்னை வந்து சேர்ந்ததும் இப்போதும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.

I'm not a superstitious person. ஆனாலும் இந்த கனவுகளும், தொடர்ந்த நிகழ்வுகளும் ஆச்சரியமாக இருக்கின்றது. கனவுகளைப்பற்றி பேசும்போது உங்களிடம் இன்னொரு கனவுபற்றியும் சொல்லத் தோன்றுகின்றது.

சோகக் கனவுபற்றி சொன்னதால், இனி ஒரு சந்தோஷக் கனவு. :)

உங்களில் யாராவது கனவில் பறந்ததுண்டா? நான் கனவுகளில் பறந்திருக்கின்றேன். யாராவது என்னை துரத்திக் கொண்டு வரும்போது, அவர்களிடமிருந்து தப்பிக்கவோ, அல்லது எனக்கு அவசரத் தேவையாக எங்கேயாவது விரைவாக செல்ல வேண்டும் என்று தோன்றும்போதோ நிலத்திலிருந்து மேலெழுந்து பறப்பேன். இறக்கை எதுவும் முளைத்திருக்காது :) . ஆனாலும் இலகுவாக பறக்க முடியும். அது கனவாகவே இருந்தாலும், மிகவும் அபூர்வமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போ நீண்ட நாட்களாக அப்படி கனவு வரவில்லை. :(
ஒருவேளை எந்த ஆபத்தும் எனக்கு இல்லாததாய் உணர்கின்றேனோ? அல்லது எந்த அவசரமும் இப்போது இல்லையோ தெரியவில்லை. :)

Thursday, July 05, 2007

பகல் ராத்திரி!

நோர்வே - 8


நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் மக்களுக்கு நீண்ட பகல் காலங்கள் மகிழ்ச்சி தருபவை. அதனால் நீண்ட பகல்களைக் கொண்ட இந்த கோடை காலத்தில் சூரியன் வானத்தில் வந்து புன்னகைப்பதுபோல், மக்களும் அறிந்தவர் அறியாதவர் என்ற வேறுபாடு பார்க்காமல், எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது புன்னகைத்து செல்லும் காலமாக இருக்கும்.
பைபிளில் குறிப்பிடப்படும் Johannes என்பவரின் பிறந்தநாள் 24 ஜூன் என்றும், அந்த நாளை குறிப்பிடும் விதமாக, அந்த நாளுக்கு முதல் நாள் மாலையில், அதாவது 23 ஜூன் அன்று மாலை இந்த கொண்டாட்டம் நடாத்தப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. Sankthansaften என்று குறிப்பிடுகின்றார்கள்.
Sankthansaften நாளில் பகலில் இரு குழந்தைகளை மணமக்களாக அலங்கரித்து, அவர்களுக்கிடையே, விளையாட்டுத் தனமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவர்களை குதிரை வண்டிலில் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அந்த ஊர்வலத்தில் நிறைய மக்கள் கலந்து கொள்வார்கள் (சிறப்பிப்பார்கள் :) ). இது நடந்த நேரம் நாங்கள் போய்ச் சேரவில்லை. அதனால் படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும் கூடியிருந்த மக்களின் ஒரு பகுதி இங்கே...

ஒரு சில நாட்கள் முன்னராக குறிப்பிட்ட இடங்களில், மிக உயரமான கோபுரங்களை கட்டுவார்கள்.

இங்கே இருக்கும் படத்தில் ஒரு பெரிய கோபுரமும், பக்கத்திலேயே ஒரு குட்டிக் கோபுரமும் இருப்பதை காணலாம்.
அவற்றை அந்த நாள் மாலையில் எரிப்பார்கள்.

பெரிய கோபுரத்தின் உச்சியில் ஏறி தீ மூட்டும் காட்சி. அப்போது நேரம் மாலை 9.30.

தீ வைத்த பின்னர், அவசரமாக இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

உச்சியில் உள்ள கூர்மையான முனை எரிகின்றது.

எரிந்து கொண்டு போகும்போது முனை கீழே விழுகின்றது, புகை கிளம்புகின்றது. அடிக்கடி நீரை அடித்து சூட்டை குறைப்பதுடன், மெதுவாக எரியும்படி பார்த்துக் கொள்கின்றார்கள்.
அதற்கு எங்கள் ஊரில்போன்று பழங்கதைகளும் உள்ளன. :) ஊரில், மலைகளில் வந்து தங்கி இருக்கும் தீய சக்திகள், பேய், பிசாசு போன்றவை, இந்த பெரிய தீப்பிழம்பைக் கண்டு ஓடிப் போய் விடுமாம். தற்போது யாரும் இந்த கதைகளை நம்புவதில்லை என்றாலும், ஒரு மகிழ்ச்சியான பொழுது போக்காகவும், முழு பகலைக் கொண்ட நாளில் ஒரு கொண்டாட்டமாகவும் இதை தொடர்ந்து செய்து வருகின்றார்களாம். அந்த கோபுரம் எரிக்கும் நாளில் , ஜூன் 23 ஆம் திகதி, கோபுரம் இருக்கும் இடத்தை சுற்றி கூடாரங்கள் எல்லாம் போட்டு, ஒரு திருவிழா மாதிரி அமைத்து வைத்திருப்பார்கள். பல இடத்திலிருந்தும் அங்கே வந்து கூடி, குடித்து, கும்மாளமடிப்பார்கள். மாலை 9.30, 10 மணிக்கு அந்த கோபுரம் எரிக்கப்படும். அதன் பின்னர் இரவிரவாக (இரவு எங்கே வருது, அதுதான் வெளிச்சமாக இருக்குமே :) ) சுற்றித் திரிவார்கள்.

தீ அந்த மாலை (இரவு) வேளையில் அழகாக கொழுந்து விட்டு எரிகின்றது.


Photo Sharing and Video Hosting at Photobucket

நேரம் நடு இரவு 12 மணி. இன்னும் தெளிவான வெளிச்சம் இருப்பதை காணலாம்.

எங்கள் நாட்டில் சில கோவில்களில், சிவராத்திரி நாளன்று இப்படி கோபுரம் கட்டி எரிப்பதையும், இரவிரவாக மக்கள் விளித்திருந்து கொண்டாடுவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கே சிவராத்திரி, இங்கே அது “பகல்ராத்திரி”. :)

Monday, June 18, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 7

நோர்வே - 7!


நோர்வே நாடு பற்றிய தொடரை முடித்து விட்டேன் என்று எண்ணியிருந்த வேளையில், எனக்கு எதிர் பாராமல் கிடைத்த சில சரித்திர தகவல்கள் இதை அடுத்த பகுதிக்கு கொண்டு சென்று விட்டது :).

நோர்வேயில் பேர்கன் நகரமானது இரண்டாவது பெரிய நகரமாகும் 1240 ஆம் ஆண்டில் பேர்கன் நோர்வேயின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய தலைநகரம் ஒஸ்லோ என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள்தானே.

இங்கே நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது பேர்கன் நகரில் உள்ள Bryggen என்றழைக்கப்படும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். இது மிகவும் பழமை வாய்ந்த கட்டடத் தொகுப்பு அல்லது குடியிருப்பு ஆகும். அதை "counting house" என்று அழைக்கின்றார்கள். இந்த இடமானது UNESCO னால் 1972 இல் உருவாக்கப்பட்ட 'பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்களின் பட்டியல்' இல் 1979 ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.


இந்த Bryggen கட்டடத் தொகுப்பில் காலத்துக்கு காலம் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டாலும், இது ஒரு பரம்பரைச் சொத்தாக கணிக்கப்பட்டு, அதே பழைய நிலையில் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த கட்டடத் தொகுதி 1070 ஆம் ஆண்டளவில் நோர்வேஜிய மக்களால் கட்டப்பட்டு இருந்தாலும் (இதுவரை நாளும் நான் இந்த கட்டடங்கள் ஜேர்மனியர்களால் கட்டப்பட்டவை என்று தவறாக எண்ணியிருந்தேன்), 1360 - 1764 காலப் பகுதியில் அந்த இடம், ஜேர்மனியர்கள் வசம் இருந்தபோது மிகவும் பிரசித்தமடைந்து இருந்தது. 1360 ஆம் ஆண்டில் நோர்வேயை ஆண்ட ஒரு டென்மார்க் அரசனால், Hanseatic League என்றழைக்கப்பட்ட, ஜேர்மனிய வர்த்தகர்களின் கட்டுப் பாட்டுக்குள் நோர்வேயின் வியாபாரம் வந்து சேர்ந்தது. அப்போது இந்த குடியிருப்பு பகுதியும் அவர்களிடம் வந்தது. 1764 இல் நோர்வேஜிய அரசனால், மீண்டும் நோர்வேஜிய வர்த்தகர்கள் வசம் அந்த வர்த்தக முக்கியத்துவம் பெற்ற இடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் இந்த இடத்தை தமது வியாபார நோக்கத்திற்கு பாவித்து வந்தனர். இந்த கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கடல்நீரேரி வருவதனால், பெரிய கப்பல்களும் நேரடியாக, கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கொண்டு வரப்பட்டு வியாபாரிகளுக்கு இலகுவாக இருந்தது. பேர்கன் மிக முக்கிய பண்டமாற்று வியாபாரத் தலமாக அமைந்திருந்தது. நோர்வேயில் இருந்து உலர் மீன்கள் (dry fish) அதிகளவில் வெளிநாடுகளுக்கு சென்றது. இந்த உலர் மீன்கள் உப்பு சேர்க்கப்படாமல், காற்றில் உலர்த்தப் பட்டு பெறப்படுபவை. (1980 ஆம் ஆண்டளவில் எண்ணெய்வளம் கண்டு பிடிக்கப்படும்வரை, நோர்வேயின் பொருளாதாரம் மீனிலும், கப்பல் கட்டும் தொழிலிலுமே தங்கி இருந்தது).


பின்னர் இந்த கட்டடத் தொகுதி ஜேர்மனியர்கள் வசமானது. ஹன்சியன்ஸ் என்றழைக்கப்படும் ஜேர்மனிய வர்த்தகர்கள் தமது அலுவலகத்தை இந்த கட்டடத்தில் வைத்திருந்ததுடன், ஜேர்மனிய வியாபாரிகளே இந்த குடியிருப்புக்களில் இருந்தனர். ஒவ்வொரு கட்டடத் தொகுதியிலும் 10 தனி வீடுகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் 10 வேலை பழகுபவர்கள் (13 வயது வந்த சிறுவர்களே apprentices ஆக அழைத்து வரப் படுவார்கள்) இருப்பார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முகாமையாளர் இருப்பார். ஒரு கட்டடத் தொகுதிக்கு ஒரு சொந்தக்காரர் இருப்பார். அவர் மட்டும் திருமணம் செய்து ஜேர்மனில் வசிப்பார். மற்ற எவரும் திருமணம் செய்யாதவர்கள். எனவே இந்த முழுமையான கட்டடத் தொகுதியில், முற்று முழுவதுமாய் ஆண்கள் மட்டுமே வசித்து வந்தார்கள். பெண்களுடன் பேசுவதற்கு கூட தடை உண்டாம். முக்கியமாக நோர்வேஜிய பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால், முகாமையாளராக இருந்தாலும், அதற்கு தண்டனை உண்டு. முகாமையாளருக்கு அதி குறைந்த தண்டனை எல்லோருக்கும், ஒரு அண்டா பியர் (barrel bear) வாங்கிக் கொடுப்பது. தொழில்பழகும் இளவயதினருக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுமாம்.


இந்த கட்டடங்கள் முற்றிலும் பலகைகளால் ஆனதாய் இருப்பதனால், இங்கே எதையும் சூடாக்கவோ, விளக்குகள் வைத்திருக்கவோ, மெழுகுதிரி வைத்திருக்கவோ அனுமதி இருக்கவில்லை. அனைவரின் வீட்டிலும் தீயணைப்பதற்காக கட்டாயமாக தண்ணீர் கலன் இருக்க வேண்டும். குளிர் காலங்களில் அனேகமானோர் பின்னே இருக்கும் ஓய்வறையிலேயே அதிக நேரத்தை செலவளிப்பார்கள். அந்த காலங்களில் வியாவாரமும் மிகவும் மந்த நிலையிலேயே நடைபெறும். ஒவ்வொரு குடியிருப்பிலும் அமைந்திருக்கும் 10 வீடுகளுக்கும் பொதுவான ஓய்வு வீடு ஒவ்வொரு குடியிருப்பின் பின் பக்கம் அமைந்திருக்கும். அந்த ஓய்வறை கல்லால் ஆனது. அங்கே வேலை பழகுபவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதுடன், கூட்டங்களும் நடத்தப்படும். சமையல் செய்வதற்கென ஒவ்வொரு குடியிருப்பின் பின் பகுதியிலும் பொதுவான, தனியான சமைக்கும் வீடு கட்டப்பட்டிருக்கும். எத்தனை பாதுகாப்புடன் இருந்தாலும், காலத்துக்கு காலம் இந்த குடியிருப்பு நெருப்பின் தாக்கத்துக்கு உட்படுவதும், மீள அமைக்கப்படுவது நடந்திருக்கின்றது.

ஒவ்வொரு குடியிருப்புக்கும் பொதுவான மலசல கூடம் (ஒன்றே ஒன்றுதான் அத்தனை பேருக்கும்), குடியிருப்புக்கு முன்பாக, கடலை அண்டி இருக்கும். அவற்றை நகரின் அழகு கருதி, பின்னர் அகற்றி விட்டடர்கள். அங்கே வெளிப்புறத்தில் சரக்குகள் இறக்கி வைப்பதற்கான கட்டடமும் உண்டு. தற்போது அந்த இடம் அதே பழைய நிலையில் இருந்தாலும், அந்த கட்டடத் தொகுதியின் பகுதிகள், உல்லாசப்பயணிகளுக்கான பொருட்கள் விற்கப்படும் கடைகளால் நிறைந்து இருக்கின்றது.

உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்!

உலக சுற்றுச் சூழல் தினமன்று, சுற்றுச் சூழல் பாதுகாப்பு சம்பந்தமாக பல்கலைக் கழக வளாகத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளைப் பார்ப்பதற்கும், அது தொடர்பான ஒரு செமினாருக்கு போகவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்தை விளக்கும் ஒரு விவரணப்படத்தை பார்வையிடவும் சந்தர்ப்பம் கிடைத்தது.


அந்தப் படம், 'An inconvenient truth' . அமெரிக்க அரசியலில் மிக முக்கிய பங்கெடுத்த Al.Gore உலக வெப்பமயமாதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய இந்த விவரணப் படத்தை தயாரித்து வழங்கியிருக்கின்றார். அதில் நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து, இந்த உலகம் பாதிப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி கவலைப்படாமல் இருக்கும் அறியாமை பற்றியும், அதை தடுத்து நிறுத்த நம்மாலான முயற்சியை எடுக்க வேண்டும் என்ற உண்மையும் கூறப்படுகின்றது. நம்மைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். நச்சு வாயுக்களால் நிரப்பப்பட்டு, அவர்களை அழிக்க கூடிய சூழலையா? சலசலத்தோடும் நீரோடை, காற்றில் அலையும் இலைகளின் சத்தம், பறவைகளின் இனிமையான குரல் இப்படியெல்லாம், நாம் அனுபவித்த இனிமைகளை நமது சந்ததிக்கு தெரியாமலே ஆக்கி விடப் போகின்றோமா என்ற கேள்வியை படம் பார்த்த பின்னர் நமக்குள் ஏற்படுத்துகின்றார் Al.Gore. படம் பார்த்து முடிக்கையில், மனதில் பாரமாய் உணர வேண்டியிருந்தது.


சூழல் மாசினால் முதலில் வெப்பநிலை அதிகரிப்பும், அதனைத் தொடர்ந்த பாதிப்புக்களும் ஏற்படும் நாடுகள் வட துருவத்தை அண்டியிருக்கும் நாடுகள் (நோர்வேயும்தான் :)). வெப்பநிலை அதிகரிப்பால் கடல்மட்டம் உயரும்போது நெதர்லாந்து இலகுவாக பாதிப்படையும் (ஏற்கனவே கடல் மட்டத்திற்கு கீழே நிலப் பகுதியை கொண்டிருக்கு). இப்படி பல தகவல்கள் படத்தில் தரப்பட்டிருக்கின்றது.

Al.Gore யின் குடும்பத்துக்கு சொந்தமான விவசாயப் பண்ணையில் புகையிலை வளர்த்து வந்தார்களாம். புகையிலை புற்று நோயை ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பது தெரிந்தும், அவர்கள் அதை தொடர்ந்து செய்திருக்கின்றார்கள். Al.Gore யின் அக்கா சிறு வயதிலேயே புகைப்பிடிக்க ஆரம்பித்து, இறுதியில் நுரையீரல் புற்று நோயால் இறந்த போதுதான், அந்த தாக்கம் தமக்கு ஏற்பட்டதாகவும், அன்றிலிருந்து புகையிலை பயிரிடுவதை அவரது அப்பா கை விட்டதாகவும் குறிப்பிட்டார்.


தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு, வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே நம்மை பாதிப்பதாலும், அதற்கு தரப் படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதிகளின் பாதிப்பை விடக் கொடூரமானதாக சுற்றுச் சூழல் மாசு வந்து கொண்டிருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார் Al.Gore.


ஐரோப்பிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதி முன்னணியில் இருக்கின்றன. ஐரோப்பாவை பொறுத்த அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உதவக் கூடிய வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


சூழல் மாசடைதலை தவிர்க்க நான் ஏதாவது பங்களிப்பு செய்ய முடியுமா? ஆம் என்கின்றார்கள். நாம் மேற்கொள்ளக் கூடிய 10 இலகுவான காரியங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றும் வீட்டில், வெளியில், அலுவலகத்தில் நாம் எவ்வாறு நடந்து கொண்டால், நமது பங்களிப்பை பயனுள்ளதாக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் ஏன் நமது பங்களிப்பை இன்றே ஆரம்பிக்க கூடாது?

Tuesday, June 12, 2007

புகைக் குழந்தை!

புகைக் குழந்தை!


வேலை செய்யும் இடத்தில் மதிய உணவுக்காக கூடியிருந்தோம். அப்போது புத்தம் புதிதாய் ஒரு குழந்தைக்கு பாட்டியாக பதவி உயர்வு பெற்ற ஒரு பெண்ணும் அங்கே இருந்தார். குழந்தை பிறந்தது அறிந்ததும், ஒஸ்ரியா போய் குழந்தையை பார்த்து விட்டு திரும்பி இருந்தார்.

மிகவும் ஆவலுடனும், ஆசையுடனும் அந்த குழந்தையைப் பார்த்து வந்த மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை என்ன நிறை என்று ஒருவர் கேட்க, அதற்கு அவர், 2400g என்று சொன்னார். உடனே இன்னொருவர் premature baby யா என்று கேட்க, "இல்லை, குழந்தை சரியான நேரத்தில்தான் பிறந்திருக்கிறது. ஆனால் உடல் எல்லாம் மிகவும் மெலிவாக இருக்கிறது. கைகளைப் பார்த்தால், ஒரு மெல்லிய தடியில், கொஞ்சம் பெரிதான உள்ளங்கையை வைத்து ஒட்டியதுபோல் இருக்கிறது. அந்தக் குழந்தை ஒரு புகைக் குழந்தை" என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார். எனக்கு புரியவில்லை. 'அது என்ன புகைக் குழந்தை?' என்று பக்கத்தில் இருந்தவரிடம் மெதுவாய் விசாரித்தேன். அவர் சொன்னார், "குழந்தையின் தாய் புகைப்பவர். குழந்தை வயிற்றில் இருந்த காலத்திலும் தொடர்ந்து புகைத்திருக்கின்றார்" என்று. கவலையாக இருந்தது. புகைத்தலின் கேடுகள் தெரிந்திருந்தும், அது குழந்தைக்கு கெடுதல் என்று தெரிந்திருந்தும் எப்படி அந்த தாயால் புகைத்தலை நிறுத்திக் கொள்ள முடியாதிருந்தது என்று நினைத்துப் பார்த்தேன்.

இனியாவது புகைப்பதை நிறுத்தி விடுவாராமா என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருடம் மட்டும் வீட்டிற்குள் புகைப்பதை (குறித்துக் கொள்ளுங்கள் புகைப்பதை அல்ல) நிறுத்தி வைப்பதாக வாக்கு கொடுத்திருக்கின்றாராம். குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் புகைக்கத்தான் போகின்றார். ஆனால் வெளியே போய் புகைப்பாராம். ஒரு வருடத்துக்குப் பின்னர் வீட்டினுள் புகைத்தால் மட்டும் அது குழந்தையை பாதிக்காதா? இவர்கள் ஒன்றும் passive smoking பற்றி கேள்விப் படாதவர்கள் அல்லவே. தனது குழந்தைக்கு கேடானது என்று தெரிந்தும், எப்படி இவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிகின்றது?

நோர்வேயில் 35-44 வயது எல்லைக்குள் புகைப்பவரில் பெண்களே அதிகமாக இருப்பதாகவும், 45-54 வயதுக்கிடையில் புகைப்பவர்களில் ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதாகவும், ஏனைய வயதெல்லைகளில் ஆண்களே அதிகம் புகைப்பவர்களாய் இருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. குழந்தைகளுடன் அதிக தொடர்பு வைத்திருக்கும் வயதில் இந்த பெண்கள் ஏன்தான் புகையை நாடுகின்றார்களோ என்று எரிச்சலாக இருக்கிறது.


புகைத்தல்!

பொது இடங்களில் நின்று கொண்டு புகைப்பவர்கள், அந்த புகையை மற்றவர் நாசிக்கும், சுவாசத்திற்கும் அனுப்பி, நாற்றத்தை கொடுப்பதோடு, தம்மை மட்டுமல்லாமல், மற்றவர்களையும் உடல் நலிவடையச் செய்கின்றார்கள். ஏன் இதை உணர மறுக்கின்றார்கள்?

Funny pictures இல் ஒரு இடத்தில், குழந்தையின் வாயில் சிகரெட் இருப்பதுபோல் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. நகைசுவைக்காக என்று ஒரு குழந்தையின் வாயில் சிகரெட் வைத்து படம் எடுக்க எப்படி முடிகின்றது என்றுதான் எனக்கு தோன்றியது.

புகைப்பவர்களுக்கு புகைத்தலை தவிர்ப்பதற்கு வழங்கப்படும் மிக முக்கியமாக 10 காரணங்கள் ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.

10. வரி அதிகரித்துக் கொண்டு போகும் இந்த கால கட்டத்தில், புகைத்தலுக்குரிய செலவும் அதிகரித்துக் கொண்டே போகும். இந்த செலவு அவசியம்தானா?

9. உங்கள் குடும்பத்தை நேசிப்பவரா நீங்கள் இருந்தால், அவர்களுக்கு வலியை கொடுப்பது அவசியமானதா?

8. உங்கள் நேரத்தை விரயமாக்கி, உங்களை பலவீனமானவராய் ஆக்கும் இந்த புகைத்தல் அவசியமானதா?


7. நாற்றத்தை உருவாக்கி, உங்களை ஒரு சுத்தமானவராக காட்டாத இந்த புகைத்தல் அவசியமானதா?

6. அழகான வெண்பற்களின் நிறத்தையே மாற்றி அலங்கோலமாக காட்டுவது அவசியம்தானா?

5. உங்களுக்கு நீங்களே கெளரவமற்றவராக மாறிக் கொள்வது அவசியம்தானா? புகைத்தலை விட்டு விடுவதனால், நீங்களே கண்ணியமானவராக உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள மாட்டீர்களா?

4. நீங்கள் புகைத்தலை விட்டு விட்டால், புகைக்கும் மற்றவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர முடியுமல்லவா?

3. புகைத்தலை நிறுத்துவது கடினமானது. அதையே உங்களால் நிறுத்தி விட முடிந்தால், நீங்கள் விரும்பும் வேறு பல உபயோகமான காரியங்களை செய்வதற்கும் உங்களுக்கு தனி வலிமை கிடைக்குமல்லவா?

2. கான்சரைப் பற்றியோ, இதய நோய்கள் பற்றியோ, வேறு இது தொடர்பாக வரும் நோய்கள் பற்றியோ பயந்து கொண்டிருக்காமல், உடல் நலமுள்ளவராக உணர்வது எத்தனை இனிமையாக இருக்கும்.

1. துர்ப்பழக்கத்தை கை விடுவதன் மூலம், அல்லது தூக்கி வீசுவதன் மூலம், உங்களை நீங்களே அதிக தகுதி உடையவராக ஆக்கிக் கொள்கின்றீர்கள்.

Yes, you deserve better for yourself.


இது விடயமாக, எங்கேயோ வாசித்து, மனதுக்கு பிடித்த ஒரு வரி>.......

"மனிதனே, தவணை முறையில் கிடைக்கிறது என்பதற்காக மரணத்தைக் கூடவா வாங்க துணிந்து விட்டாய்?"

புகைத்தலை விடுவதற்காய் சிலர் நிக்கோட்டின் சுயிங்கம் பாவிக்கின்றார்கள். இந்த சுயிங்கம் கன்னம், முரசு, தொண்டையில் கான்சரை கொண்டு வரலாம் என்று சொல்கிறார்கள். இதன் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், இதில் பக்க விளைவு இல்லை என்று சொன்னாலும், பல ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையல்ல என்கிறார்கள். நிக்கோட்டினின் தொழிற்பாடு அங்கேயும் இருப்பதால், பக்கவிளைவுகள் மட்டும் எப்படி இல்லாமல் போகும். நியாயமான கேள்விதானே? ஒரே ஒரு நன்மை இந்த சுயிங்கத்தால்... பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவு இல்லை, அந்த சிகரெட் நாற்றத்தால் மற்றவர்களை கஷ்டப்படுத்த தேவை இல்லை :). ஆனால் குடும்ப உறுப்பினர்கள், பாசம் கொண்டவர்களுக்குத் தீராத தொல்லைதான். நிக்கோட்டின் சுயிங்கத்தில், நிக்கோட்டினுடன் ஒரு addictive drug உம் உள்ளது என்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு பழக்கத்தில் இருந்து விடுபட, இன்னொரு பழக்கத்துக்கு, அதுவும், அதே தீயவிளைவுகளைத் தரும், அடிமைப்படுத்தும் பழக்கத்துக்கு மாறுவதா?

ஆனால், சரியான consultant இன் உதவியுடன், இந்த சுயிங்கம் பாவிப்பதால், பின்னர் சிகரெட்டுடன், அந்த சுயிங்கத்தையும் கை விட்டு விடலாம் என்கிறார்கள். அது ஒரு வேளை சரியாக இருக்கலாம். மனதில் உறுதிதான் முக்கியம். அது இருந்தால், consultant இல்லாமலே கூட இந்தப் பழக்கத்தை கை விட்டு விடலாம். நமக்கு ஒன்று மிகவும் பிடித்ததாய் இருந்தாலும், அதை எம்முடன் உள்ளவர்களுக்காகவும், ஏன் முக்கியமாய் எமக்காகவும், அந்த ஒன்றை நாம் விட வேண்டும் என நினைத்தால், அந்த மன உறுதியை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அது முடியுமல்லவா?

Monday, June 11, 2007

மொழி!

மொழி!

நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.

மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.

படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து வரும் நகைச்சுவை நன்றாக உள்ளது. விஜி தனது காதலை வெளிப்படுத்தும் விதம் இரசிக்கும்படியாக இருந்தது :). பெண்ணின் பெற்றோரிடம், "நீங்க நாளைக்கே முடிவு சொல்லணும் னு அவசியமில்லை, இன்னைக்கே கூட சொல்லிடலாம்." என்று சொல்வது நன்றாக இருந்தது :).

அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசைக்கு என்ன அர்த்தம் என்ற நண்பரின் கேள்விக்கு, அர்ச்சனாவின் பதில் மனதைத் தொட்டது. வாய்பேச முடியாத, காதும் கேட்காத அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசையும் ஒரு மொழி. தனக்குத் தெரியாத மொழிகளில் ஒன்றாக இசையையும் சேர்த்துக் கொண்டு, அதை எதிர்மறையான பாதிப்பு எதுவுமின்றி சாதாரணமாக சொல்லும் மனப்பக்குவம் மனதைத் தொட்டது.

படத்தின் சில இடங்கள் நெகிழ்வைத் தந்ததுடன், தொண்டை அடைக்க (வலிக்க) வைத்தது. பூ விற்கும் ஒரு சின்னக் குழந்தையுடன், கார்த்திக் மெளன பாஷையில் பேசியதும், முழுப் பூவையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதும் தொண்டையில் இருந்த நீரை கண்ணுக்கு இடம் மாற்றியதால், தொண்டை வரண்டு வலித்தது. ஏனென்று தெரியவில்லை.

மேலும், மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ளாமல், மகன் இறந்த காலத்திற்கு முன்னைய காலத்தில் வாழும் proffessor செருப்பு வாங்கிக் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டதும், கார்த்திக் வாங்கிக் கொடுத்ததை சந்தோஷத்துடன் மற்றவரிடம் காட்டி மகிழ்வதைக் கண்டு கார்த்திக் மன நிறைவுடன் செல்வதும், கடைசியில் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கார்த்திக்கிடம் சொல்லும்போது, அவரை உண்மையை சொல்லி உணர வைத்து, அவரை கார்த்திக் வாய்விட்டு அழ வைக்கும் காட்சி, எனக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது.

காதுக்கு இனிமையான, உணர்வுக்கு அருமையான பாடல்கள்.

ஆனாலும், அந்த 'பேசா மடந்தையே' என்ற பாடலுக்கு சிவப்பு உடையணிந்த பெண்கள் வந்து அவசியமே இல்லாமல் நடனம் ஆடிவிட்டுப் போவது பொருத்தமில்லாமல் இருக்கின்றது.

எனக்கு தமிழில் மிகப் பிடித்த இரண்டு சொற்களுக்கு இந்த படத்தில் இருக்கும் முக்கியத்துவம் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போகச் செய்திருக்கின்றது. அவை 'மொழி', 'மெளனம்'.


அன்புக்கு மொழி அவசியமில்லை!!!

பி.கு> இந்த படத்தை ஒரிஜினல் VCD யில் அல்லாமல் திருட்டுத் தனமாக தான் பார்த்ததும் அல்லாமல், என்னையும் பார்க்க வைத்த ரவிசங்கருக்கு நன்றி! படத்தை பார்ப்பதில் இருந்த ஆர்வம் குற்றம் செய்கின்றோம் என்ற எண்ணத்தை மறக்கச் செய்து விட்டது. :)

Thursday, May 31, 2007

நகரில் அலைந்தோம்!

நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக இருந்தது. ஆனால் நான் பரவாயில்லை. சில பேர்கன்வாசிகளே, இந்த சரித்திர வரலாற்றை நேற்றுத்தான் சரியாக தெரிந்து கொண்டதாக கூறியபோது, அட, நாம பரவாயில்லையே என்று தோன்றியது :).

தொடரின் கடைசிப் பகுதியில், கடைகோடித் தமிழன் "இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே" என்று முன்மொழிய, அதை பொன்ஸ் வழி மொழிந்திருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதுவதன் மூலம், அவர்கள் ஆசையையும் கொஞ்சம் பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகின்றது :).

நேற்று மாலை Byen med paraply யில் (Byen med paraply = The town with umbrella = Bergen) வழிகாட்டிகளின் துணையுடன் ஒரு சின்ன Byvandring = town wandering = நகர அலைச்சல் = நகர் உலா :) க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் பேர்கனில் இருப்பவர்களுக்கு நகரத்தில் 'என்னத்தை பெருசா சுற்றிக் காட்டப் போறாங்க' என்று ஒரு சின்ன ஏளனத்தோடு நினைத்தேன். இருந்தாலும், 'அப்படி என்னதான் காட்டுறாங்க பார்ப்போமே' என்ற எண்ணத்தில் போனேன். போனதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நகர் சுற்றிப் பார்த்து முடிந்ததும், இரவு உணவும் இருக்கு என்று சொல்லியிருந்தார்கள் :). போய் வந்த பின்னர் இத்தனை அருகில் இருந்தும், எவ்வளவு விஷயம் இத்தனைநாள் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.

நேற்று நல்ல காலநிலை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்தும், அந்த நேரத்தில் மழையும், குளிரும் ஆரம்பித்து விட்டது. பேர்கனில் இருந்துகொண்டு மழைக்குப் பயந்தால் முடியுமா என்று விட்டு அனைவரும் நடக்கத் தொடங்கியாச்சு. நல்ல காலநிலையை எதிர் பார்த்திருந்ததால், மழைக்கேற்ற, குளிருக்கேற்ற ஆடைகள், காலணிகள் அணியாததால், குளிரில் நடுங்கி, விறைத்துப் போக வேண்டி வந்து விட்டது. ஆனாலும் வழிகாட்டியின் சுவாரசியமான தகவல்களைக் கேட்டுக் கொண்டே நகர் அலைந்து முடித்தாயிற்று. அந்த சுவாரசியமான தகவல்கள் அடுத்த நோர்வே -7 பதிவில் வரும்.

நம்ம பேர்கன் நகரத்துக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. The city with Rhododenrons. பேர்கன் நகரின் மிதமான காலநிலை, ஈரப்பதன் என்பன இந்த Rhododenrons க்கு மிகவும் உகந்ததாக அமைந்திருப்பதால், வசந்த காலத்தில் இந்த பூக்கள் பேர்கன் நகரின் பல பகுதிகளிலும் சிரித்துக் கொண்டிருக்கும்.நமது நகர் அலைச்சல் முடிந்ததும், மிக தொன்மையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதியில், வரலாற்றுப் பதிவுகளை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பகுதியில் இரவு உணவை அருந்தினோம்.

சரி வரலாறு அடுத்த பகுதியில் வரும். அப்போ இந்த பதிவு எதுக்கா? சும்மா ஒரு முன்னோட்டம்தான் :).

Monday, May 14, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 6

நோர்வே 6!

வரலாறு

இந்த பகுதியில், முதலில் ரவிசங்கரும் பொன்ஸ் உம் பின்னூட்டத்தில் வரலாறு பற்றி கேட்டிருந்ததுக்கு பதில் சொல்லலாம் என்று யோசிக்கின்றேன். (நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் எனக்கு வரலாறு பாடத்தில் குறைந்த புள்ளிகள்தான் கிடைப்பது வழமை :). அதனால் இதுவும் எப்படி இருக்குமோ தெரியாது. இவர்கள் இருவரும் எனக்கு எத்தனை புள்ளிகள் போடுகின்றார்கள் என பார்க்கலாம்).

ரவிசங்கரின் கேள்வி இதுதான்.....
"உலகளாவிய அமைதி முயற்சிகள்ல நோர்வே தான் முன்னால நிக்குது. இதுக்கு அந்த நாட்டின் வரலாறும் ஒரு காரணம்னு சொல்லுறாங்க..இதப் பத்தி கொஞ்சம் விளக்க முடியுமா?"

நோர்வேயின் உலகளாவிய அமைதி முயற்சிக்கும், நோர்வேயின் வரலாறுக்கும் ஏதாவது நேரடி தொடர்பு இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எதுவும் தென்படவில்லை :). அதனால் இந்தக் கேள்வியை நோர்வேஜியர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் சரியான பதிலை தரவில்லை.

அதே வேளை, நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் நோர்வேஜிய மக்கள் அனைவரின் பொதுவான கருத்து அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பங்களிப்பதே என்று கூறியிருக்கிறார். அமைதி முயற்சிகளில் நோர்வே ஆற்றும் தொடர்ந்த பங்குக்கு அவர் 6 விடயங்களை திறவு கோல்களாக கூறுகின்றார்.

1. அரசாங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அமைதி முயற்சிகள் சம்பந்தமான விடயங்களில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாது, ஒரு தொடர் நிலையை தக்க வைத்துக் கொண்டிருப்பது.

2. மனிதநேய உதவிகள், அபிவிருத்தித் திட்டங்கள், அமைதி முயற்சிகள் மூன்றிற்கிடையேயும் ஒரு ஒன்றிணைப்பு கொள்கையை கொண்டிருத்தல்.

3. மக்கள் சமூகத்துக்கும், அரச சார்பற்ற நிறுவங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பை பேணி வருவது.

4. அமைதி முயற்சிகளில் ஈடுபடும் இடங்களில் வேறு எந்த சொந்த தேசிய நலனையும் எதிர் பார்க்காமல் செயற்படுவது.

5. UN, NATO, the US, European partners உடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பது.

6. அமைதிப் பேச்சு வார்த்தைகளில் நேர்மையான, உண்மையான அக்கறை காட்டுவது.

நோர்வேஜிய வரலாற்றில் எனக்கு தெரிந்த தகவல்களை இங்கே சொல்லி விடுகின்றேன். நோர்வேஜிய மொழி படித்தபோது அவர்கள் சொல்லிக் கொடுத்ததை இங்காவது சொல்லாவிட்டால் எப்படி, அதுதான் :). நோர்வேயின் வரலாற்றுக்கும், நோர்வே அமைதி முயற்சிகளில் முன்னிற்பதற்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா என்பதை ரவிசங்கர்தான் சொல்ல வேண்டும் :).

நோர்வேயில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஜேர்மன், பின்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் குடியேறியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் நோர்வே பல குட்டிக் குட்டி இராச்சியங்களாக இருந்ததாகவும், பின்னர், Harald Fairhair என்பவர் அனைத்து இராச்சியங்களையும் கைப்பற்றி, ஒன்றாக்கி, இணைந்த நோர்வேயின் முதல் அரசனாக வந்தார்.

வீக்கிங் காலம் (Viking Age) என அழைக்கப்படும் 8 - 11 நூற்றாண்டில் நோர்வேஜிய வீக்கிங் மக்கள் கப்பலில் பல நாடுகளுக்கும் வர்த்தக நோக்கங்களுக்காக சென்று (கொள்ளையடித்து :)), வெவ்வேறு நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வீக்கிங் மக்கள் விட்டுச் சென்ற சரித்திரப் பதிவாக, அண்மைய காலம்வரை நோர்வேயில் கப்பல் கட்டும் தொழில் மிகவும் பிரசித்தமானதாய் இருந்தது.

1349 இல், ஏற்பட்ட ஒரு பாரிய நோய்த் தாக்கத்தால் நோர்வேயின் சனத்தொகையில் 40-50 % மக்கள் இறந்தார்கள். இந்த காலத்தை 'Black period' என்று அழைக்கின்றார்கள். Black death or Black Plague என்றறியப்பட்ட இந்த அதி வேகமாகப் பரவிய நோய் உலகின் பல பாகத்திலும் பெருத்த சேதத்தை, மக்கள் இறப்பை ஏற்படுத்தியது.

இதன்போது நோர்வே பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்தது. அதன் பின்னர் நோர்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டன. பின்னர் ஸ்வீடன் சுதந்திரம் பெற்று பிரிந்து சென்றிருந்தும் சில காலம் டென்மார்க்கும் நோர்வேயும் இணைந்தே இருந்தன. நெப்போலியன் காலத்தில் ஏற்பட்ட போரின் பின்னர் மே 17, 1814 இல் நோர்வே சுதந்திர நாடாக இருப்பதற்கான அரசியல் யாப்பை உருவாக்கி, சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. ஆனாலும் ஸ்வீடன் பலாத்காரமாக நோர்வேயை தன்னுடன் இணைத்து தனது இராச்சியத்தின் கீழ் வைத்திருந்தது.

1840 ஆம் ஆண்டளவில், நோர்வேஜியருக்கென தனிப்பட்ட கலை கலாச்சாரத்தை பேணுவதற்கென ஒரு அமைப்பு உருவானது. அந்த அமைப்பு Norwegian romantic nationalism என அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு நோர்வேக்கு என தனிப்பட்ட தேசிய அடையாளத்தை கொடுக்கக் கூடிய இலக்கிய, ஓவிய, இசை, மற்றும் மொழி சம்பந்தமான கொள்கைகளை வகுத்துக் கொள்ள உதவியது. Edvard Greig என்பவர், உலகில் பிரபலமான ஒரு இசையமைப்பாளர்களுள் ஒருவர். அவர் தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்த வீடு, அவரது பொருட்கள் நிறைந்த பொருட்காட்சிச்சாலை தற்போது பேர்கனில் (நான் வாழும் நகரத்தில்), Trollhaugen என்னுமிடத்தில் சுற்றுலாத் தலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அவரது வீடு இயற்கை அழகு நிறைந்த ஒரு இடத்தில், கடலுடன் நெருங்கி அமைந்திருக்கிறது. இந்த இடம் பார்த்து வந்ததும் ஒரு இனிமையான அனுபவமே.

1905 இல் ஸ்வீடனிடம் இருந்து, அமைதியான முறையில் நோர்வே பிரிந்து தனியாகி விட்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரில், நோர்வே எந்த ஒரு பக்கச் சார்பையும் எடுக்காது இருந்தபோதும் (முதலாம் உலகப் போரில் போன்றே), 1940 இல் ஜேர்மனியப் படைகள் நோர்வேயை முற்றுக்கையிட்டன. நோர்வே இந்த தாக்குதலை எதிர் பார்த்திருக்காவிட்டாலும், 2 மாத காலத்துக்கு அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டது. இந்த காலமே ஜேர்மன் படைகள் தாம் சென்ற நாடுகளில் எதிர்ப்பை சந்தித்த அதி கூடிய காலமாக இருந்தது. ஜேர்மன் படைகளின் முற்றுக்கையின்போது நோர்வேயிடம் இருந்த கடற்படையே உலகின் 4 வது பெரிய கடற்படையாக இருந்தது. ஐந்து வருடங்களின் பின்னர் சரித்திரத்தின் தற்செயல் நிகழ்வாக, 1945 மே 8 ஆம் திகதி (அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினத்திற்கு 9 நாட்கள் முன்னதாக) நோர்வேயில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்து, ஜேர்மனிய படைகள் சரணடைந்தன. ஆனாலும் மே 17 நாளே இங்கே கோலாகாலமாக கொண்டாடப்படுகின்றது. (ஒரு வழியாக மே 17 க்கு 3 நாட்கள் இருக்கும்போது எனது பதிவை நிறைவு செய்யப் போகின்றேன் :) ).

1949 இல் நோர்வே NATO வில் இணைந்தது. 1960 களில் பெற்றோலிய பொருட்கள் கண்டறியப்பட்ட பின்னரே, நோர்வேயின் பொருளாதாரத்தில் பிரமாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது பற்றி எடுக்கப்பட்ட இரு பொதுமக்கள் வாக்களிப்பில் (1972 இலும் 1994 இலும்), மக்களால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில்லை என்ற முடிவு பெறப்பட்டது.

அப்பாடா, ஒரு மாதிரி வரலாறு கொஞ்சம் சொல்லியாச்சு :).

மொழி

முக்கியமாக இரு சம அந்தஸ்து கொண்ட நோர்வேஜிய மொழிகள் அரசாங்க மொழிகளாக இருக்கின்றன. Bokmål and Nynorsk. ஆனாலும் Bokmål தான் அதிகளவு பாவனையில் உள்ளது. பொதுவாக வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதும் இதுதான். தற்போது Nynorsk இன் பாவனையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் பெரிய வேறு பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதனால் மக்கள் பேசும்போது புரிந்து கொள்வதில் பல நேரங்களில் தடுமாற்றம் இருக்கின்றது.

இது விடயமாக நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நான் இங்குள்ள பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலமது. செய்முறை வகுப்புக்களுக்கு தவறாமல் போகும் நான், theory வகுப்புக்கு போக சோம்பல்படுவேன். அதுவும் காலை வேளையில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இந்த குளிரில் எழுந்து போய் என்ன செய்வது என்று விட்டு விடுவேன். ஒரு சமயம் நோர்வேஜிய மொழியில் ஒருவர் பாடம் நடத்திக் கோண்டிருந்தார். அவர் பேசியது எதுவுமே (ஒரு வரி கூட) எனக்கு புரியவில்லை. பாடம் முடிந்த பின்னர் அருகில் இருந்த நோர்வேஜிய மாணவனிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை என்று கவலையுடன் கூறினேன். அவன் சொன்னான் "கவலை வேண்டாம். எனக்கும்தான் புரியவில்லை. காரணம் அவர் நோர்வேயின் அதி வடக்கில் ஒரு இடத்தில் இருந்து வந்து, அங்கே பேசப்படும் பேச்சு வழக்கில் பேசுகின்றார்". எனக்கோ பெரிய திருப்தி. :)

நோர்வேஜிய மொழிக்கும், ஸ்வீடன், டென்மார்க் மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாசிக்கும்போதோ, அல்லது அவர்கள் பேசும்போதோ ஓரளவுக்கு அவற்றை புரிந்து கொள்ள முடியும். இது சம்பந்தமாகவும் ஒரு அனுபவம். ஒரு தடவை பயிற்சி வகுப்பொன்றில், என்னைப் போலவே ஒரு வெளி நாட்டவர் (ஈரான்) என்னுடைய குழுவில் இணைந்திருந்தார். அவர் மிக விரைவாக பேசிக் கொண்டு போனார். அவரிடம் நோர்வே வந்து எவ்வளவு காலம் என்று கேட்டேன். அவர் மூன்று மாதங்கள் என்றார். நான் வந்து ஒன்றரை வருடத்துக்கும் மேலாகி விட்டிருந்தது. எனவே நான் அவரிடம் "மூன்று மாதத்திலேயே நீங்கள் நன்றாக நோர்வேஜிய மொழியை பேசுகின்றீர்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர் "நான் பேசுவது நோர்வேஜிய மொழியல்ல, ஸ்விடிஷ் மொழி. நான் பல வருடங்களாக ஸ்வீடனில்தான் வசிக்கின்றேன்" என்றார். மொத்தத்தில் எனக்கு நோர்வேஜிய மொழியும் தெரியவில்லை, ஸ்வீடிஷ் மொழியும் தெரியவில்லை :). அனேகமாக இங்கிருக்கும் ஸ்வீடிஷ் மக்கள் நோர்வீஜிய மக்களுடம் பேசும்போது, தங்கள் சொந்த மொழியிலேயே பேசுவார்கள், இவர்களும் புரிந்து கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளின் வேறு பட்ட மொழிகளிலும் கூட பல சொற்கள் ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். சில சொற்கள் ஒரே எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் உச்சரிப்பு விதத்தில் வேறுபாட்டை கொண்டிருக்கின்றன.

இந்த இரு மொழிகள் தவிர்ந்த இன்னுமொரு மொழியும் நோர்வேயில் உள்ளது. Sami languages என்றழைக்கப்படுகின்றது. அந்த மொழியை பேசுபவர்கள் அதிகமாக நோர்வேயின் வட பகுதியில் வசிக்கும் பழங்குடியினர். பழைய வரலாற்றுடன் தொடர்புடையவர்களாக கருத்தப்படும் இவர்களுக்கு தனிப்பட்ட கலை கலாச்சார வடிவங்கள் இருக்கின்றன. அந்த மொழியும் அரசாங்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தங்கள் மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளும் உரிமையும், அங்கீகாரமும் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

சில ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், நோர்வேஜிய மக்கள் வெளி நாட்டவருடன் ஆங்கிலத்தில் உரையாடுவதில் தயக்கம் காட்டுவதில்லை. அதனால் ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதுமானது.

இங்கே முக்கியமாக கற்பிக்கப்படும் வெளிநாட்டு மொழிகள் ஆங்கிலம், ஜேர்மனிய மொழி, French மொழி. இந்த மூன்று மொழிகளிலும், அத்துடன் டனிஷ் (Danish), ஸ்வீடிஷ் (Swedish) ஆகிய இரு ஸ்கண்டினேவிய மொழிகளிலும் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்தவும், எந்த பாடத்துக்கான பரீட்சைகளையும் அந்த மொழிகளில் எடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகின்றார்கள்.

அது மட்டுமல்ல, எந்த ஒரு மாணவரும், தனது மேல்நிலைப்பள்ளி படிப்பின் இறுதியில் தனது தாய்மொழியையும் ஒரு பாடமாக எடுக்க அனுமதிக்கப் படுகின்றார். அதற்குரிய புள்ளிகள் அவரது மேல் படிப்பு சம்பந்தமான தேவையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. சில நகரங்களில், பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் தாய்மொழி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், பிரத்தியேக வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அதற்காக குறிப்பிட்ட மொழிகளில், குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.

மதம்

Norse or Scandinavian mythology எனப்படும் ஒரு பழங்கால மதவழியை ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் பின்பற்றி வந்தார்கள். பின்னர் அனேகமானோர் கிறிஸ்துவர்களாக ஆனார்கள். ஆனாலும் பலரும் மதத்தில் அதிகமான ஈடுபாடு வைத்திருப்பதில்லை என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. தேவாலயத்துக்கு முறையாக போகின்றவர்கள் மிகவும் அரிது. Baptism, Confirmation (தமிழ் சொற்கள் தெரியவில்லை), திருமணம், இறப்பு போன்ற தருணங்களிலேயே மதச் சடங்குகள் நடை முறைப் படுத்தப் படுகின்றன. எல்லோரும் இதை கைப்பற்றுவதுமில்லை. அனேகமானோருக்கு திருமணம் பதிவு செய்யும் அலுவலகத்திலேயே முடிந்து விடும். வெவ்வேறு வகையான கிறிஸ்தவ அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக இஸ்லாம் மதம் (1.5 %) இருக்கின்றது. அதற்கும் அடுத்த நிலையில் இந்து மதத்தினர் இருக்கின்றார்கள். புத்த மதமும், இன்னும் சில மதங்களிலும் ஈடுபாடு கொண்ட சிறிய சனத்தொகையும் இருக்கின்றது. சிறிய அமைப்புக்களாக இருந்தாலும், எல்லா மதத்தினருக்கும் சகல, உரிமையும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

முடிவு

இத்துடன் நோர்வே பற்றிய எழுத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று எண்ணுகின்றேன். :)

வடுவூர் குமார் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அதனால் அவரை சிங்கப்பூர் பற்றி எழுத அழைக்கின்றேன். இந்தியா பற்றியும் யாராவது எழுதலாமே. அதற்கு பொன்ஸ் ஐ அழைக்கலாம் என்று பார்க்கின்றேன். :) எனது இந்த 'நாடு நல்ல நாடு' பதிவை தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்ட களத்து மேடு எந்த நாட்டில் இருக்கின்றார் என்று தெரிந்தால், அவரையும் அவர் வாழும் நாட்டைப்பற்றி எழுத அழைக்கலாம். :)

நிறைவு

Wednesday, May 09, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 5

நோர்வே 5

முந்தைய பதிவில் களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன்.

நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய பனிப்பாறைகள் நோர்வேக்கு சொந்தமான, ஆனால் பெரு நிலப் பரப்பிலிருந்து தனியாக அமைந்திருக்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) என்றழைக்கப்படும் கூட்டமான தீவுகளில் அமைந்திருக்கின்றன. இந்த தீவுக் கூட்டம் வடதுருவத்துக்கும், நோர்வேயின் பெரு நிலப்பரப்புக்கும் இடைப்பட்ட தூரத்தின் நடுப்பகுதியில் ஆர்க்டிக் சமுத்திரத்தில் இருக்கின்றது.

இந்த உருகும் பனி மலைகளில் இருந்து உருகி ஓடும் நீர் தேங்கி நிற்கும் ஏரிகள் குடிநீர் சேகரிப்புக்கான இடங்களாக பயன்படுகின்றன. Isbre என்ற பெயர் கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரானது உலகளவில் பெரு மதிப்பை பெற்றுள்ளது.

இந்த குடிநீரானது United States Patent and Trademark இடம் "The World's Best Drinking Water"® என்ற அடையாளத்தையும், EU trademark இடம் "Isbre-The World's Best Drinking Water"® என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. இந்த குடிநீர் பெறப்படும் இடம் ஹடங்கர் (Hardanger) என்ற, பேர்கனுக்கு அண்மையாக உள்ள இடமாகும். கிட்டத்தட்ட 100 மைல் நீளமான கடல் நீரேரியின் முடிவில் அமைந்திருக்கும் நீர்த்தேக்கத்தில் இருந்து பெறப்படும் இந்த குடிநீர் மிகவும் தூய்மையானதாக கருதப் படுகின்றது.


காரணம் மக்கள் குடியிருப்புக்களில் இருந்து அதி தொலைவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்திருப்பதால், செயற்கையான அசுத்தப் படுத்தல், மாசுபடுத்தல் எதுவுமற்று இருக்கின்றது. இந்த இடத்தை சுற்றிலும், பழ மரங்கள் நிறைந்த மலைகள், கடல் நீரேரிகள், நீர் வீழ்ச்சிகள் என்ற அழகான இயற்கை அம்சம் நிறைந்த விடயங்களே காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் நிரந்தர குளிர் காலநிலையால், குறைந்த வெப்ப நிலையில் இயற்கையான இரசாயன மாற்றங்கள் நடை பெறுவதும் தவிர்க்கப்படுகின்றது. இந்த நீரை உருவாக்கும் உருகும் பனிநிலைகள் 5,000 - 10,000 வருடத்துக்கும் பழமையானவையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.

உப்பு, கனிமங்கள், உலோகப் பொருட்களின் கலப்படம் எதுவுமற்ற, மிகத் தூய்மையான நீரை எடுக்க முடிகின்றது. இந்த நீரை பிறந்த குழந்தைக்கு கூட கொதிக்க வைக்காமல் கொடுக்கலாம் என்று சொல்கின்றார்கள். (ஆனால் குழந்தை விடயத்தில் நான் அந்த risk எடுக்கவில்லை :) ).

அழகின் ஒரு முக்கிய பகுதி :)

முந்தைய பதிவில் இன்னொரு இயற்கை அழகை குறிப்பிட மறந்து விட்டேன். பல நீர் வீழ்ச்சிகளை ஆங்காங்கே கொண்டிருக்கும் நீண்ட பள்ளத் தாக்கு. பேர்கனில் இருந்து அதிக தொலைவில் இல்லாத Fløm valley க்கு சென்று வந்தது மறக்க முடியாத இனிமையான அனுபவம். உயரமான மலைத் தொடர்களில் இருந்து மலையடிவாரத்துக்கு செல்ல பஸ் உம், புகையிரதமும் உண்டு. வளைந்து வளைந்து (spiral hairpin turns) செல்லும் பாதையில், பள்ளத்தாக்கை நோக்கி போவதும், அங்கிருந்து மேலே வருவதும், வழி முழுவதும் அழகான நீர் வீழ்ச்சிகளை கண்டு களிப்பதும் இனிமையாக இருக்கும். போகும் வழியில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் நீர் வீழ்ச்சியின் உள்ளிருந்து வருவதுபோல் இரு பெண்கள் வந்து பாடலுக்கு நடனமும் ஆடுவார்கள். பள்ளத்தாக்கு இருப்பது Fløm என்ற இடத்தில் மக்கள் வசிக்கின்றார்கள். அங்கே மூன்று தினங்கள் தங்கி, அந்த இடத்தின் அழகை முழுமையாய் அனுபவித்துவிட்டு வந்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம்.


Tuesday, May 08, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 4

நோர்வே - 4!

நோர்வே நாடானது உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே வரும் :) ).
ஆனால் அதிகளவு நிலப்பரப்பை மலைகள், மலைத் தொடர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (prehistoric), பனிக்காலத்தின் (ice age) முடிவில் ஏற்படுத்தப்பட்ட உருகும் பனிநிலைகள் (glaciers), கடல்நீரேரிகள் (fjords), நீர்வீழ்ச்சிகள் (waterfalls) போன்ற இயற்கை தன் அழகை காட்டி நிற்கும் இடங்கள் தன் வசப்படுத்தி உள்ளதால், மக்கள் வாழும் நிலப் பரப்பின் அளவு குறைவாகவே உள்ளது. மலைகள், உருகும் பனிப்பாறைகள், கடல் நீரேரிகள் என்பவற்றின் அழகே அழகு.Glaciers: பனிப்பாறைகளில் மலையேற்றம் செய்பவர்களைப் பாருங்கள்.

Fjords: கடல் நீரேரிகளின் அழகைப் பாருங்கள். இந்த கடல் நீரேரிகளின் ஊடாக கப்பலில் செல்வது எத்தனை இனிய அனுபவம்.
நோர்வேயின் கரையோரப் பகுதிகளில், உள் நோக்கி இழுக்கப்பட்ட கடல்நீரேரிகளின் கரை, சிறு தீவுகளின் கரை என்று பார்த்தால், அவற்றை நீட்டி ஒரு கயிறு மாதிரி இழுத்தால் கரையின் நீளம் 25,000 km வரை வரும்.

நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள இடங்களில் சில (கிட்டத்தட்ட வடக்கில் மூன்றில் ஒரு பகுதி) ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்திருக்கிறது.
அதனால் குளிர் மிக அதிகமாக இருப்பதுடன், அழகான நடு இரவுச் சூரியனைக் காணக் கூடியதாகவும் இருக்கிறது. 'நடு இரவுச் சூரிய நாடு' என்ற பெருமையை அடைகின்றது.

Midnight sun: நடு இரவில் இப்படி சூரியனைப் பார்த்தால் எத்தனை மகிழ்வாக இருக்கும்.

இன்னும் ஒரு அழகு வடதுருவ ஒளி (Northern Light) தெரிவது. வட துருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு ஒளியின் அபூர்வத் தோற்றமே இந்த வடதுருவ ஒளி எனப்படுவது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித் தோற்றத்துக்குரிய விஞ்ஞானப் பெயர் Aurora Borealis Celestial Phenomenon என்பதாகும். இதை இயற்கையின் வாணவேடிக்கை என்று சொல்லலாம். இருண்ட வானத்தின் குறுக்காக, நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படுவதாக, கற்பனையால் மெருகூட்டிச் சொல்லலாம். இந்த அழகை நேரில் பார்ப்பவர்கள், இந்த அழகை வார்த்தைகளால் விபரிப்பது கடினம் என்று சொல்கிறார்கள். நான் பார்க்கவில்லை. :(

நான் வாழும் பேர்கன் (Bergen) நகரம் பற்றியும் சொல்லி விடுகின்றேன். நோர்வேயின் தலை நகரம் ஒஸ்லோ விற்கு அடுத்ததாக பெரிய நகரம் பேர்கன் நகரம். மிகவும் அழகான இடமும் இதுவாக இருப்பதால், உல்லாசப் பயணிகளுக்கு (வெளி நாட்டுக்கு, உள்நாட்டுக்கு) உகந்த இடமாக அமைந்திருக்கிறது. இது பழைய தலை நகரமாகவும் இருந்திருக்கிறது.


இந்த நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன் கடல் நீரேரிகளுக்கான வாசலாகவும் (Gateway to fjords) அமைந்துள்ளது. ஒரு மலையில் ஏறி, மலையேற்றம் மூலம் நடந்தே அனைத்து மலைகளையும் கடந்து வருவது பேர்கன் வாழ் மக்களில் பலரின் சிறந்த பொழுது போக்கு. மலையேற விருப்பமில்லாதவர்கள் வாகனத்திலும் போகலாம். ஒரு மலைக்கு cable bus வசதியும், இன்னொரு மலைக்கு cable car வசதியும் உண்டு.
பேர்கனைப் பற்றிய இன்னொரு தகவல். அந்த நகரத்தை 'குடையுடன் கூடிய நகரம் (Byen med paraply)' என்று செல்லமாக அழைப்பார்கள். காரணம் ஐரோப்பிய நகரங்களில் அதிக மழை பெய்யும் நகரம் இதுவே. ஒரு வருடத்தில் அதி குறைந்ததாக 200 நாட்கள் மழை பெய்யும். அதனால் நகரம் எப்போதும் குளித்து மிகவும் சுத்தமாக இருக்கும். :). சில நாட்கள் மழை தொடர்ந்து இலாவிட்டால் பேர்கன் வாழ் மக்களுக்கு கவலை வந்து விடும். இதை பார்த்தால் பேர்கனில் பெய்யும் மழை நிலவரம் தெரிய வரும். பேர்கன் இத்தனை அழகான நகரமாக இருந்தும் பலர் இங்கு வந்து வாழ்வதில் விருப்பம் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இந்த மழையின் அளவுதான். :(

நோர்வேயின் அழகை வர்ணித்தாயிற்று. அடுத்த பதிவில் இன்னும் சில விடயங்களை சொல்லி விட்டு நிறைவு செய்து விடலாம் என்றிருக்கிறேன்.

Monday, May 07, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 3

நோர்வே 3!

நோர்வே பற்றிய எனது முதலாவது பதிவின் இறுதியில் நோர்வேயின் காலநிலை பற்றி எனது புதிய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்வதாக எழுதி இருந்தேன். பிறகு gl இன் ஒரு கேள்விக்கு பதில் சொன்னதால் அடுத்த பதிவில் அதுபற்றி எழுதவில்லை. இப்போ எழுதுகின்றேன்.

நான் நோர்வேக்கு வருவதற்காக விமானத்திற்காக Netherland Amsterdam விமான நிலையத்தில் காத்திருந்தபோது, ஒரு வயது முதிர்ந்த நோர்வேஜிய மனிதர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடியதால், மொழிப் பிரச்சனை இருக்கவில்லை. மிகவும் நட்பாக அவர் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நோர்வே பற்றிய ஒரு பாதுகாப்பு உணர்வையும் தந்தது.

நான் நோர்வேயில் கால் பதித்த நாள் நோர்வே தொடர்ந்த, இடை விடாத பனிமழையில் சில நாட்களாய் குளித்து, குளிர்ந்து, நடுங்கிக் கொண்டிருந்த ஒரு நாள். அன்று நான் தற்போது வாழும் நகரான பேர்கன் (Bergen) நகரத்தில், அதி கூடிய பனிமழை காரணமாக விமான நிலையமே மூடப்பட்டிருந்தது. நான் தலைநகரான ஒஸ்லோ விமான நிலையத்தில் தரையிறங்கினேன். தரையில் எங்கே இறங்கினேன், ஸ்னோவில் இறங்கினேன். :)


நோர்வேயை அண்மித்ததும் பைலட், பனிமழை காரணமாக ஓடுபாதை சீரற்று இருப்பதால் தற்போது விமானத்தை தரையிறக்க முடியாது என்றும், அதனால் வானத்தில் வட்டமடிக்கப் போவதாகவும் ஒரு அறிவிப்பை செய்தார். பனிமழையின் பாதிப்பு எப்படி என்று சரியாக புரியாததால், 'சரி ஏதோ பிரச்சனை. இறக்கும்போது இறக்கி விடட்டும்' என்றெண்ணிக் கொண்டு கண்ணை மூடி, இருக்கையில் சாய்ந்து கொண்டேன். பின்னர் இங்கே ஸ்னோவில் வழுக்கி விழவேண்டி வந்த நேரத்தில்தான் உண்மையான பிரச்சனை புரிந்தது :). இலங்கை நேரத்துக்கு தூக்கம் கண்ணை அள்ளிக் கொண்டு போனதில், அப்படியே உறங்கியும் போய் விட்டேன். மீண்டும் விமானம் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு வந்தபோது எழுந்து நேரத்தைப் பார்த்தால், அரைமணித்தியாலம் கடந்து விட்டிருந்தது. அரை மணித்தியாலத்திற்கும் மேலாக வானத்தில் வட்டமடித்தபடி இருந்திருக்கிறோம்.

கீழே வந்து இறங்கிய போதும், அதே வயதான மனிதர் எனது பொதிகளை எடுப்பதில் உதவி செய்தார். என்னால் தூக்க முடியாத அளவு பாரமுள்ள பொதியை அல்லவா (மேலதிக கட்டணமாக பணம் செலுத்தி எடுத்து வந்த பொதிகளை:)) அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்தேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், வெள்ளைக்கம்பளம் விரித்து ஒஸ்லோ வரவேற்றது. அந்த ஸ்னோவை தொட்டுப் பார்த்த பின்னர்தான் ஸ்னோ இதுதான் என்பது சரியாக புரிந்தது. கற்பனையில் நான் அறிந்த ஸ்னோ போலில்லாமல், மெதுமையாக இருந்தது. குளிருக்கு ஏற்ற உடை முதலே அணிந்திருந்ததால், குளிரை அதிகம் உணரவில்லை. அன்றும், தொடர்ந்த மூன்று நாட்களுக்கும் பேர்கனுக்கான புகையிரத சேவைகளும், பனி காரணமாய் இரத்துச் செய்யப் பட்டு இருந்ததால், ஒஸ்லோவில் சினேகிதர்களுடன் தங்க வேண்டி வந்தது. நோர்வே வந்த புதிதில், குழந்தையாய் மாறி ஸ்னோவில் விளையாடியது மறக்க முடியாதது. ஸ்னோ அடித்து ஓய்ந்த பின்னர், மரங்கள் எல்லாம் பெரிய பெரிய வெள்ளைப் பூங்கொத்துகளாக காட்சி அளிப்பது கொள்ளை அழகு.


ஆனால் இந்த அழகு ஆபத்தாய் முடியும் சந்தர்ப்பங்கள்தான் சங்கடமானவை. பனிமழையைத் தொடர்ந்து மழை பெய்து, ஸ்னோ இறுகிப்போய், பாதைகள் எல்லாம் வழுவழுக்கும் கண்ணாடியாய் மாறி இருக்கும்போது, நடனம் ஆடிக்கொண்டே நடக்க வேண்டி வந்து விடுகின்றது. வழுக்கி விழுந்து எழும்ப வேண்டியும் வருகின்றது. நாங்கள் மட்டும் விழுந்து எழும்பவில்லை. நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மக்களே கூட சிலர் விழுந்து எலும்பை முறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கையில் நாம் எம்மாத்திரம்? அப்படி நாட்களில் விபத்துக்கள் அதிகம் நடந்து வைத்தியசாலைகள் நிரம்பி விடுவதுமுண்டு.

வடபகுதியில். சில சமயம் பெரும் பனிமழையின் பின்னர், வீட்டின் கதவுகளை முற்றாக மூடி பனி கொட்டி இருப்பதும், கதவை திறந்து கொண்டு மக்கள் வெளியே வர முடியாமல் இருப்பதும் நடக்கும். அப்படி சந்தர்ப்பங்களில் காவல்நிலையத்துக்கோ, அல்லது தீயணைக்கும் பிரிவினருக்கோ, தொலைபேசி மூலம் தகவல் அனுப்பி, அவர்கள் வந்து பனியை அப்புறப்படுத்தி, அவர்களை வெளியே கொண்டு வர வேண்டியதிருக்கும்.

நோர்வே வந்த முதல் நாள் அதிகாலையில் 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. 6 மணி வரை படுக்கையிலேயே படுத்திருந்தேன். யாரும் எழுவதாயில்லை. போய் குளித்து விட்டு வந்தேன். அப்போதும் யாரும் எழுவதாயில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். புத்தகமும் வாசித்து முடிந்து விட்டது. 3 மணித்தியாலமும் கடந்து விட்டது. அப்போதும் யாரும் எழுவதாயில்லை. வெளியே பார்த்தால் இன்னும் இருள். அடுத்த புத்தகத்தை எடுத்து வாசித்தேன். ஒரு வழியாக 11 மணியளவில் ஒவ்வொருவராய் எழுந்து வந்தார்கள். அன்று விடுமுறை நாள், அதனால் அப்படி எழுந்ததாகச் சொன்னார்கள். வெளியே இருள் மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது. அப்படியே சில மணி நேரம் கடந்த பின்னர், 3 மணி போல், மீண்டும் இருள் கவிய ஆரம்பித்தது. எனக்கு இருள் பிடிப்பதில்லை. இவ்வளவு நேரம் இருளாய் இருந்தால் என்ன செய்யப் போகின்றேன் என்று முதல் முறையாய் பயப்பட ஆரம்பித்தேன்.

இருள் பற்றி நான் சோகமாக சொன்னபோது மற்றவர்கள் சிரித்தார்கள். நோர்வேயின் வடபகுதியில் குளிர் காலத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் அளவில் முழு இருளிலேயே வாழ்கின்றார்கள் என்று சொன்னார்கள். அங்கு வாழும் தமிழர்கள், மாலை 2-3 மணிக்கு, திறந்த வெளியில் கூட மின்சார ஒளியில்தான் கிரிக்கெட், கால் பந்து எல்லாம் விளையாடுவார்களாம். வட பகுதிகளில் இந்த குளிர்காலம் 6 மாத காலம் கூட நீடிக்கும். நோர்வேயில் குளிர் காலத்தில் (winter season) பகல் நேரம் என்பது ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே. டிசம்பர் 21 ஆம் திகதி அதி கூடிய இரவைக் கொண்ட நாள்.

அதுவே கோடை காலமாயின் (summer season), நாள் முழுமைக்கும் தொடர் வெளிச்சம்தான். ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே இரவாக இருக்கும். இரவு 11-12 மணி வரையில்தான் இருள ஆரம்பிக்கும். மீண்டும் அதிகாலை 2 மணிக்கு வெளிச்சம் வர ஆரம்பித்து விடும். அதிகூடிய பகல்நாள் ஜூன் 21 ஆம் திகதி வரும். அன்று அதை சிறிய கொண்டாட்டமாக வைத்துக் கொள்வார்கள். எங்கள் ஊரில் இந்துக் கோவில்களில் சிவராத்திரிக்கு, பெரிய கோபுரம் போல் கட்டி, அதை எரிப்பதுபோல், பல ஊர்களிலும் ஜூன் 21 ஆம் திகதி அன்று, பலகைகளால் ஆன கோபுரம் செய்து அதை எரிப்பார்கள். நோர்வேயின் வடக்குப்பகுதி ஆர்க்டிக் வட்டத்தினுள் வருகின்றது. அங்கே முழுநாளும் பகல்தான். அதனால் நடு இரவுச் சூரியனை கண்டு களிக்கலாம். நான் இன்னும் நோர்வேயின் வட பகுதிக்கு போனதில்லை. அங்கே போவதற்கு அதிக செலவாகும். கிட்டத்தட்ட அந்த செலவில் எவ்வளவோ தூரத்தில் இருக்கும் நம்ம ஊரை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்பதால் வடநோர்வே பயணம் பின் போடப்பட்டுக் கொண்டே போகின்றது :).

அழகு நிறைந்த கடல்நீரேரிகளை (fjords தமிழ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறானால் திருத்தி விடுங்கள்) கொண்ட உலகத்தின் பகுதிகளில் நோர்வேயும் ஒன்று. எனது அடுத்த பதிவில் நோர்வேயின் அழகுபற்றி எழுதுகின்றேன்.

Friday, May 04, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 2

நோர்வே - 2

முந்தைய எனது பதிவில் பாலுற்பத்தியில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் நோர்வேயும் ஒன்றா என்ற கேள்வியை gl கேட்டிருந்தார்.

நீண்ட காலமாக கப்பல்துறை நோர்வேயின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை கொண்டிருந்தது. ஆனால் நோர்வேயின் இயற்கை வளங்களே தற்போதைய அதி உயர் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. பெற்றோலிய வளமும், நீர்மின்னியல் சக்தி, மீன் வளமும் இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நோர்வே பொருளாதாரத்தில் பாலுற்பத்தி உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பில் வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.

நோர்வேயில் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாகவே உள்ளது. பெற்றோலும், மீனும் கூட, நோர்வே அவற்றை ஏற்றுமதி செய்து அனுப்பும் நாடுகளில் உள்ள விலையை விட அதிகம் என்றால் பாருங்களேன் :). அமெரிக்காவின் வாழ்க்கைச் செலவை விட 30% அதிகமாக நோர்வேயில் வாழ்க்கைச் செலவு இருக்கின்றது என்று ஒரு கணிப்பீடு சொல்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக, நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக கருதப் படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான சில கூட்டு முயற்சிகளில் பங்கேற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் முழுமையாக நோர்வே இணைந்து கொள்வதை நோர்வேஜிய மக்கள் விரும்பவில்லை என்பதை ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் காட்டியுள்ளார்கள்.

தனி மனிதனுக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product per capita, or GDP per capita) உலக நாடுகளில்
இரண்டாவது இடத்தை நோர்வே கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வேலையில்லாப் பிரச்சனை மிகவும் குறைவாகவே (3% ஐ விட குறைவு) உள்ளது. அத்தோடு, நோர்வேஜிய சமூகம் வேலைக்கான ஊதியத்தில் மக்களிடையே அதிக வேறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்கின்றது. அதி குறைந்த ஊதியம் பெறுபவருக்கும், அதி கூடிய ஊதியம் பெறுபவருக்கும் இடையில், நிகர வருமானத்தில் (net income) வேறுபாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. (அதிகம் உழைத்தால் வரியை கூட்டோ கூட்டென்று கூட்டி, ஒரு வழி:) )க்கு கொண்டு வந்துடுவாங்க.

குழந்தைகளுக்கான உரிமை, நலன், மற்றும் பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள் நலனை பேணிப் பாதுகாப்பதிலும் நோர்வே முன்னணியில் இருக்கின்றது. தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. தவறு செய்பவர்களுக்கு, சட்ட நடைமுறைகள் முடிந்து, அதிகார பூரவமாக தண்டனை தீர்ப்பு வரும்வரை, எந்த ஒரு தண்டனையும் வழங்கப்படக் கூடாது என்று சட்டம் இருக்கின்றது. (அட சிறிய தவறுக்கு கிடைக்கும் சிறிய தண்டனைகளில், தண்டனைக்கு உட்படுபவரே எந்த நாட்களில் சிறையில் இருப்பது என்பதை தீர்மானிக்க அனுமதிக்கப்படுவார். வெளியிலே இருக்கிறது bore அடிச்சா, உள்ளே போய் சில நாட்கள் இருந்து விட்டு வரலாம், ஹி ஹி. சிறையில் தொலைக்காட்சி, கணினி, தொலைபேசி உட்பட எல்லா அடிப்படை (???) வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றதாம். உடனே நான் அங்கே இருந்து பார்த்தேனா ன்னு கேட்காதீங்க. எல்லாம் காது வழி கேட்ட செய்திதான்).

அட, நான் என்னவோ 'நடு இரவுச் சூரியன்' பத்தி எழுதுறதா சொல்லிட்டு, என்னென்னவோ எழுதிக்கொண்டு போகின்றேன். சரி விடுங்க. அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Thursday, May 03, 2007

நாடு நல்ல நாடு - நோர்வே 1

நோர்வே - 1

நாடு நல்ல நாடு தொடரில் நோர்வே பற்றி எழுத ரவி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எழுத வேண்டும் என்று நினைப்பதிலேயே நாட்கள் கடந்து விட்டது.

மே 17 ஆம் திகதி
நோர்வே நாட்டின் 'அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினம்' (Constitutional Day) அல்லது தேசிய தினம் (National day) வருகின்றது. அதற்கு முன்னராவது நாம் வாழும் நாடுபற்றி எப்படியாவது எழுதி விட வேண்டும் என்று எழுதுகின்றேன். நாம் வாழும் நாட்டுக்கு ஒரு மரியாதை செய்ததாக இருக்கட்டுமே :).

நோர்வேயைப்பற்றி மிகவும் பெருமைப் பட்டுக் கொள்ளக்கூடிய விஷயம் ஒன்றுள்ளது. நோர்வே உலக நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீட்டின்படி, மாந்த வளர்ச்சிச் சுட்டெண்
[The Human Development Index (HDI) ] முதலாம் இடத்தில் இருக்கின்றது. இந்த HDI ஆனது, வாழ்க்கைத் தரம் (standard of living), சராசரி மனித வாழ்க்கைக் காலம் (average life expectancy), எழுத்தறிவு (literacy), தலைக்குரிய வருமானம் (per capita income) போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப் படுகின்றது. 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நோர்வே இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வேயானது நோர்வே இராச்சியம் (The Kingdom of Norway) என்றே அழைக்கப்படுகின்றது. இங்கே அரச பரம்பரையினர் இருந்தாலும், அவர்களிடம் அதிகாரங்கள் இல்லை. அரசியல் அமைப்பு பாராளுமன்ற முறையிலேயே அதிகாரங்களை கொண்டிருக்கின்றது. அரச பரம்பரையினர், விசேட நாட்களில், முக்கியமாக மே 17 அன்று, நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் இருக்கும் தங்களது மாளிகையின் (Royal House) மொட்டை மாடியில் நின்று மக்களை நோக்கி கையசைப்பார்கள். மக்களும் அன்றைய தினத்தில் அரச பரம்பரையினரை பார்வையிடுவதையும் அங்கு நடைபெறும் ஊர்வலங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதையும் வழமையாகக் கொண்டுள்ளனர். அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக இந்த அரச பரம்பரையினர் அறியப்படுகின்றார்கள்.

மே 17 ஆம் திகதி கொண்டாட்டங்களை, 'தேசிய தினக் கொண்டாட்டம்' என்று சொல்லாமல், 'மே 17 கொண்டாட்டம்' (Sytende Mai = Seventeenth May) என்றே சொல்கின்றார்கள். 1814 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதியன்று, நோர்வேயின் அரசியல் நிர்ணய அமைப்பு கைச்சாத்திடப்பட்டது. அதற்குப் பின்னர் பல அரசியல் மாற்றங்கள், அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த நாள் நோர்வேயில் மிக முக்கிய நாளாகவும், கொடிதினமாகவும் கொண்டாடப் படுகின்றது.

மே மாதத்தின் ஆரம்பத்தில் இரு கிழமைகளும் (மே 1 ஆம் திகதியில் இருந்து மே 17 ஆம் திகதி வரை), பதின்ம வயதின் இறுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு (மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு போகப் போகும் மாணவர்கள்) மிகப் பெரிய கொண்டாட்டம். பெற்றோரின் பாதுகாவலில் இருந்து வெளியேறி, திடீரென குழந்தைப் பருவத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமாக, வளர்ந்தோரின் நிலையை அடைவதாக இந்த நாட்களை எடுத்துக் கொள்கின்றார்கள். It is an abrupt way of ending the childhood and the entering into adulthood, but also marks acomplishing high school. இவர்களை Russ என்ற தனிப் பெயரிட்டு அழைப்பார்கள். இந்த இரு கிழமைகளில், மிகவும் சுதந்திரமாக, குதூகலமாக (பாடித் திரியும் பறவைகள் போலே) இருப்பார்கள். அந்த நாட்களில், அதற்கென விசேஷமாக இருக்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள். ஆடையின் நிறங்கள் அவர்களது கல்வி முறைக்கேற்ப அமையுமாம். நான் அதிகம் கண்டது சிவப்பு நிற, நீல நிற ஆடைகள்தான். அந்த ஆடைகளில் நண்பர்கள் நினைத்ததெல்லாம் எழுதி வைப்பார்கள். இரு கிழமைகளும் அந்த ஆடை autograph (இதுக்கு தமிழ் என்ன?) மாதிரியான ஒரு வகைப் பயன்பாட்டில் இருக்கும். அதன் பின்னர், அதை அப்படியே வைத்திருப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை.

நோர்வே என்றதும் பலருக்கும் நினைவில் வருவது 'நடு இரவுச் சூரியன் - (Midnight Sun)'. நோர்வே பூமிப் பந்தின் வட துருவத்தை ஒட்டி இருப்பதால், கால மாற்றங்கள் (seasonal changes) மிகத் தெளிவான வேறுபாட்டுடன் அமைந்திருக்கின்றது. நான் முதன் முதல் நோர்வேயில் வந்து இறங்கியது ஒரு குளிர் காலம். நாள் 1993 டிசம்பர் 25 ஆம் திகதி, கிறிஸ்மஸ் நாள். அன்று இந்த புதிய நாடும், இங்கே கொட்டியிருந்த வெள்ளை மழையும் (அதுதான் snow) ஒரு புதிய அனுபவம். வந்த புதிதில், இங்குள்ள இரவு பகல் வேறுபாடு, காலநிலை பற்றி மாய்ந்து மாய்ந்து வீட்டுக்கு எழுதியதில், பல கடிதங்களின் பக்கங்கள் நிறைந்து போனது.

அதுபற்றி எனது அடுத்த பதிவில் எழுதுகின்றேன். :)

Thursday, March 08, 2007

பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?

நான் நீண்ட காலமாக 'என்னைப் பாதித்தவை ' யில் எதுவும் எழுதவில்லை. அதனால் என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. பாதித்தவை, பாதிப்பவை என்று நிறையவே இருந்தாலும், எழுத முடியவில்லை. காரணங்கள் பல. அது எதற்கு இங்கே. இப்போ, என்னை பாதித்த ஒரு விடயத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து ஒரு தாதி தொழிலில் இருக்கும் ஒரு பெண், ஒரு 3 மாத காலம் பிரத்தியேகமான பயிற்சிக்காக இங்கே வந்திருந்தார். இயற்கையாகவே இந்தியா என்றதும் அவருடன் பேசுவதற்கு ஒரு ஆர்வமும், அவர் தமிழ் என்றதும் ஒரு மேலதிக ஆர்வமும் வந்து தொற்றிக் கொண்டது. பேசக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில், வழமையான அறிமுகக் கேள்வியாக பெயரைக் கேட்டதும், அவர் "வேண்டா" என்றார். 'என்ன இது பெயரைக் கேட்க வேண்டாம்' என்று சொல்கின்றாரா என்று யோசித்த படியே பார்த்தபோது, அவரது பெயரே 'வேண்டா' என்பதுதான் என்பதை அழுத்திக் கூறினார். "வித்தியாசமான பெயராக இருக்கிறதே" என்று கேட்டபோது, அவர் சொன்னது, என்னை அப்படியே அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் வீட்டில் அவர் 5 வது பெண் குழந்தையாம், அதனால் பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் 'வேண்டா'. அந்த பெயரை உச்சரிக்கும் போதெல்லாம், அந்த பெண்ணுக்கு எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். 'நீ எங்களுக்கு வேண்டாத பிள்ளை' என்று பெற்றோரே சொல்வதுபோல் இருக்காதா? வேதனையாக இருந்தது. பயிற்சிக் காலம் முடிந்து அவர் இந்தியா திரும்பிய வரையில், அவரை நான் பெயர் சொல்லி அழைத்ததே கிடையாது.

இந்த பதிவை எழுத தூண்டியது, இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. சில மாதங்களுக்கு முன்னர் இங்கே தொலைக்காட்சியில் ஒரு விவரணப் படம் பார்க்க நேர்ந்தது. அந்த விவரணப் படம் பேசிய பொருள், ஆசிய நாடுகளில் பெண்களை அடக்கி வைப்பது பற்றியது.

இதை வாசிப்பவர்கள் சிலரது மனதில், "இந்த காலத்துலே போய் இப்படி பேசலாமா?" என்றோ, "என்ன எங்க வீட்டுல என்னை யாரும் அடக்கி வைக்கலையே", என்றோ, "ஏன் எங்க அப்பா, அம்மா காலத்துலே கூட பெண்கள் சுதந்திரமாத்தானே இருந்தாங்க" ஏன்றோ தோன்றலாம். அட, நான் கூட அப்படி யோசிப்பேன். ஆனால், உண்மையாவே பெண்கள் அடக்கித்தான் வைக்கப் படுகிறார்கள் என்று புள்ளி விபரம் சொல்கின்றது. அதுவும் எப்போது அடக்கப் படுகிறார்கள் என்றால், கருவிலேயே அடக்கப்படுகிறார்கள். இங்கே நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. பெண் குழந்தைகள் என்று தெரிந்ததும், அந்த குழந்தைகளை அழித்து விடுவது பற்றித்தான் சொன்னார்கள்.

பாகிஸ்தான், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இந்த விவரணப் படம் எடுக்கப் பட்டிருந்தது. பாகிஸ்தானில் எடுத்த பகுதியில் ஒரு காட்சியில், ஒரு வீட்டில் புதிதாய் பிறந்த குழந்தையும், குழந்தையைச் சுற்றி உறவினர்களும். ஆண் குழந்தை பிறந்தால் (மட்டும்) எவ்வளவு மகிழ்ச்சி என்பதை ஒரு ஆண்மகன் சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை ஆண்தான் என்பதை ஆடையை விலக்கி காட்டி மகிழ்ந்து கொள்கின்றார். கூடவே, அங்கிருக்கும் பெண்களும் சேர்ந்து ஆண்குழந்தை பிறப்பதில் உள்ள மகிழ்ச்சியையும், அதுவே பெண் குழந்தையாக இருந்து விட்டால், ஏற்படும் கவலையயும், ஆண் குழந்தையாக இருந்து விட்டதில் உள்ள மகிழ்ச்சியுடன் சொல்கின்றார்கள். ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருக்குமென்பதையும், பெண் குழந்தையாகி விட்டால், குழந்தை பெற்றுக் கொண்ட தாய்க்கு நடக்கவிருக்கும் அபாயங்களையும் சொன்னார்கள். அந்த தாயிடம் "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்ட போது, அவர் சொல்கின்றார் "என் கணவருக்கு எது வேண்டுமோ, எது விருப்பமோ, அதை செய்வதுதானே என் கடமை. அதனால் எனக்கும் பெண் குழந்தை பிறப்பது விருப்பமில்லை".

இந்தியாவில் எடுத்த பகுதியில் ஒரு காட்சியில், ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை என்று தெரிந்ததும், வற்புறுத்தலின் பேரில் கருச்சிதைவு செய்து விட்டு வந்திருக்கிறார். கூடவே பல பெண்கள் துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்கள். அவர் அழுதபடியே சொன்னது, "நான் என்ன செய்ய முடியும். அந்தக் குழந்தையை நான் பெற்றுக் கொள்ள முடிவு எடுத்திருந்தால், என்னை என் வீட்டுக்கு அனுப்பி விடுவார் எனது கணவர். எனக்கு குழந்தையை இழக்க விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை". இவர்கள் ஓரளவு படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தவர்களாகத் தோன்றினார்கள்.

அட, படிக்காத நிலையில்தான் பெண்கள் இந்த முடிவுக்கு போக வேண்டி வருகின்றது என்று பார்த்தால், இல்லவே இல்லையாம். படித்தவர்கள் பலரும் கூட இதையே செய்கின்றார்களாம். ஒரு வைத்தியசாலைக்கு (பஞ்சாப் மாநிலத்தில் என்று நினைக்கின்றேன், சரியாக நினைவில் இல்லை) ஸ்கானிங் செய்து பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறார். படித்தவராகத் தெரிந்தார். அவரது கணவரின் தாயார் கூட்டி வந்திருக்கிறார். முதலில் வைத்தியரிடம், ஸ்கானிங் இல் பெண் குழந்தை என்று தெரிந்தால் என்ன நடக்கும் என்று கேட்ட போது, அவர் சொன்னார் "இங்கே வருபவர்களில் பலரும், பெண் குழந்தை என்று தெரிந்ததும், கருவை கலைத்து விடச் சொல்லி கேட்கிறார்கள். முக்கியமாக, கணவரின் உறவினர்கள் இதை வலியுறுத்திச் செய்கின்றார்கள். இப்போது அந்தப் பெண்ணுடன் வந்திருப்பவரும், அதையேதான் கேட்பார். நாங்கள் என்ன செய்வது?" என்று கவலையோடு அந்த ஆண் வைத்தியர் சொன்னார். ஸ்கானிங் செய்து கொள்ள வந்த பெண்ணிடம் "என்ன குழந்தை வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்" என்று கேட்டபோது, ஒளிப்பதிவாளரையும், வைத்தியரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, மாமியார் அருகில் இல்லை என்பதையும் உறுதி செய்து கொண்ட பின்னர், மிகுந்த தயக்கத்தின் பின்னர் "எந்தக் குழந்தை என்றாலும் சரிதான்" என்று பதில் சொன்னார். மாமியாரிடம், அதே கேள்வி கேட்கப்பட்ட போது, எந்த வித தயக்கமுமின்றி "ஆண் குழந்தைதான்" என்ற பதில் வந்தது. "பெண் குழந்தை என்றால் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு முதலில் சிறிய தயக்கம் தெரிந்தது. பின்னர் சிரித்த முகத்துடன், "கருவைக் கலைத்து விடுவோம்" என்று சாதாரணமாக ஒரு பதில் வந்தது அதிர்ச்சியை தந்தது. என்னத்தை சொல்ல, பெண்களே பெண் குழந்தைகளை வேண்டாத பொருளைப் பார்ப்பதைப் போல் பார்ப்பதற்கு, சமூகம் காரணங்களையும் ஏற்படுத்தி, பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது, ம்ம்ம். சீதனம் ஒரு முக்கிய காரணமாக பேசப் பட்டது.

இங்கே இப்படி என்றால் சீனாவில் வேறு ஒரு காரணம். ஒரே ஒரு குழந்தைதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றதும், அது ஆண் குழந்தையாகவே இருக்கட்டும் என்று முடிவு எடுக்கிறார்களாம். அது ஏன் ஆணாக இருக்க வேண்டும் என்று அங்கே நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அங்கேயும் சீதனப் பிரச்சனை உண்டா என்பது தெரியவில்லை. யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

இதனால் இந்த நாடுகளில் பெண்கள், ஆண்களுக்கிடையிலான விகிதம் 50:50 ஆக இல்லாமல், சமநிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அந்த சமநிலைக் குழப்பம் அபாயமான கட்டத்துக்கு போகலாம் என்றும் சொன்னார்கள். சீனாவில் இந்த one-child-policy யால், பிறக்கும் குழந்தைகளை பதிவு செய்யாமல் இருப்பதும், இந்த விகிதம் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு ஒரு காரணமாம்.

"பெண்களின் சம உரிமையையும் சுதந்திரைத்தையும் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்துவது முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என்று சொல்கின்றார்களே. இப்படி உலகிற்கு காலடி எடுத்து வைக்க முன்னரே, பெண்கள் சம உரிமையற்றுப் போவதை என்னவென்று சொல்லலாம்?

Wednesday, February 28, 2007

சோதனைப் பதிவு!!

புதிய புளொக்கருக்கு மாறிய பின்னர் (அல்லது மாற்றப்பட்ட பின்னர்), எனது வலைப் பதிவு தமிழ் மணத்தில் வருகிறதா என்று பார்க்கவே இந்த பதிவு. ஏதோ பெருசா, பதிவுகள் எழுதிக் குவிக்கிற மாதிரி, இதுல ஒரு சோதனைப் பதிவு வேற. தேவையா இது? :)

நிறைய நாட்களாக (அல்லது மாதங்களாக) எழுத நினைத்திருந்த ஒரு விஷயத்தை எழுதும் உத்தேசம் உள்ளது. அதுக்கு முதல் இது ஒரு வெள்ளோட்டம். :)