Friday, May 20, 2005

நமது பண்பு????

நமது பண்பு????

அண்மையில் எமக்கு ஒரு அழைப்பு வந்தது... விழாவாம், பூப்புனித நீராட்டு விழாவாம்.....
மகள் வயதுக்கு வந்துதான் ஆறு மாதமாயிற்றே, அப்போது கூட ஒரு விழா எடுத்தீர்களே வினாவினோம்... அது.. அவசரமாய் உடனுக்கு செய்தது உறவுக்கு மட்டுமே எடுத்த விழா...இப்போது இது...ஊருக்கு சொல்லி செய்வது...இயம்பினார்கள்...
ஐந்நூறு பேர் கூடும் மண்டபமாம் - அதை நிரப்ப மனிதர்கள் வேண்டுமாம். தேடி அலைவதாய் சொன்னார்கள்... என்னே அன்பு... வியந்தேன் நான்... மண்டபம் நிரப்ப மக்கள் தேடும் பண்பு...வெட்கமே இல்லாமல், வெளிப்படையாய் சொன்னார்கள். மண்டபம் நிரம்பாவிட்டால் வீடியோ அழகிராதாம் - அதனால் கட்டாயம் வரும்படி கட்டளை போட்டார்கள்... மண்டபத்தை நிரப்பத்தான் மனிதர்கள் தேவையா? மனங்களை நிரப்ப இல்லையா? மனதில் எழுந்தது கேள்வி.
எதற்காக கொண்டாட்டம் என்ற கேள்விக்கு. நமது கலாச்சாரம் பேணவாம் பதில் வந்தது. பங்கு கொண்ட அனைவருக்கும் குத்து விளக்கு பரிசாம்.குழந்தையவள்... பத்து வயதேயானவள். விழா பற்றி கேட்டேன். நகை நட்டு அலங்காரம், பளபளக்கும் உடைகள், அழகாயிருந்ததுவாம். நிறையப்பேர் வந்தார்கள், நிறையப் பரிசுகளாம். குழந்தையவள் மனதின் எஞ்சிய பதிவுகள் இவை...
இப்படியாக நடத்தப்படும் விழாக்களைப்பற்றி யோசித்துப் பார்க்கிறேன். இந்த ஆடம்பர கொண்டாட்டங்கள்தான் நமது கலாச்சாரமா? இந்த கொண்டாட்டங்களே நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து விடுமா? சடங்குகள் சம்பிரதாயங்கள் எதற்கு செய்கிறோம்? காலங்காலமாய் செய்ததை நாமும் செய்கிறோம் சொல்கிறார்கள். ஆனால்..... பழையவர் செய்ததில், பல பல மாற்றங்கள் பகட்டுக்காகவென வசதிக்கேற்பவென, செய்துதானே இருக்கிறோம். அப்படி மாற்றங்களை கொண்டு வர தெரிந்த நமக்கு, அவசியம் இல்லாதவற்றை ஒதுக்கியும், அவசியமானவற்றை செய்யவும் கூடிய மாற்றங்கள் மட்டும் ஏன் பிடிக்காமல் போயிற்று? புரியவில்லை எனக்கு.
சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அந்தந்த காலத்திற்கேற்ப மாறி கொண்டுதான் வந்திருக்கின்றன. உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாமலே எதுவும் இருந்தது இல்லை. அப்படி இருக்கையில், பகுத்தறிவதன் மூலம் தேவையற்ற சடங்குகளை தவிர்த்து, தேவையானவற்றை தொடர்ந்தால் என்ன கெட்டுப் போய் விடும்?
திருமணத்தை எடுத்துக் கொண்டால், எத்தனை பவுணில் தாலி செய்யப்படுகிறது என்பதே பிரதானமாயிருக்கிறது. உண்மையில் நடந்த ஒரு விடயத்தை கூறுகிறேன். ஐரோப்பிய நாட்டில் வாழும் சகோதரர்கள் இருவருக்கு திருமணத்திற்கு தயாராய் பெண்கள் இருவர் அந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள். தம்பி திருமணம் முடிந்த பின்னரே தான் திருமணம் செய்து கொள்ளபோவதாய் அந்த அண்ணன் இருந்தார். காரணத்தை அறிந்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தம்பி எத்தனை பவுணில் தாலி போடுகிறானோ என்று பார்த்து விட்டு, அதை விட அதிகமாய் தாலி செய்து போடுவதற்காய் அண்ணன்காரன் காத்திருந்தான். பார்த்தீர்களா மனித பண்பை. கடைசியில் தம்பி 40 பவுணும், அண்ணன் 50 பவுணிலும் தாலி செய்து மனவிமாருக்கு போட்டுள்ளார்கள். அவர்கள் அந்த தாலியை காவிக் கொண்டு திரிவதில் உள்ள சிரமம் கருதியும், கள்ளர் பயத்திலும், தாலியை கழற்றி வங்கியில் வைத்து விட்டு இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து நமது கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
நமது பழைய நடைமுறையில், விழாவுக்கு வருகிறவர்களுக்கு சந்தன கும்பா, குத்து விளக்கு, எவர்சில்வர் தட்டு எல்லாம் கொடுத்து விடும் வழக்கம்தான் இருந்ததா? ஒரு சிலர் வாதிடலாம், இவை எல்லாம் ஒரு நட்புக்காய், மற்றவருக்கும் நமது அன்பை காட்ட கொடுக்கிறோம் என்று. ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், ஒருவர் செய்வதை விட நாம் அதிகமாக செய்ய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை. ஒருவர் 100 பேரை விழாவுக்கு அழைத்தால், இதோ நான் 200 பேரை அழைக்கிறேன் பார் என்ற போட்டி. அவர் என்ன சந்தன கும்பாதானே கொடுத்தார், இதோ பார் நான் பெரிய குத்து விளக்கே கொடுக்கிறேன் என்ற அகங்காரம். அவர் 5 பலகாரம்தானே செய்து கொடுத்தார், நான் பார் 7 பலகாரம் செய்துள்ளேன் என்ற ஆணவம்.
இவை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படால் சந்தோஷம்தான். ஆனால் அதுவா இங்கே நடக்கிறது? இந்தப் போட்டி மனப்பான்மை உறவினர்களுக்குள்ளேயே, ஏன் சகோதரர்களுக்குள்ளேயே இருப்பதுதான் இன்னும் வேதனை. கடன்பட்டாலும் பரவாயில்லை. விழா பெரிதாக நடக்க வேண்டும் என்பது சிலரது ஆதங்கமாய் இருக்கிறது. இதுதானா நமது கலாச்சாரம்? இதுதானா நமது குழந்தைகளுக்கு நாம் புகட்டும் பண்பாடு?
பொருளுக்கு இருக்கும் மதிப்பு அன்புக்கு இல்லை என்பதைத்தானா நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும்? இதைவிட பெரிய கேலிக் கூத்து என்னவென்றால், எத்தனை பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்பதில் கூட ஒரு பெருமை. அதிகமானோருக்கு அழைப்பிதழ் அனுப்பினேன் என்பதை சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளுவதற்காக, என்றுமே கதைத்து அறிந்திராதவருக்கு கூட, நிச்சயமாக விழாவுக்கு அவர்கள் வரப்போவதில்லை என்பதை அறிந்தே இருந்திருந்தாலும் கூட அவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது.
இப்படி பெரிதாக எடுக்கப்படும் விழாக்களில், எத்தனை உறவினர்கள், நண்பர்களிடம் நின்று நிதானமாக பேச நேரம் கிடைக்கிறது? ஓடி ஒடி வீடியோவுக்கு ஒவ்வொருவராய் அழைத்து நிற்க வைத்து படங்கள் எடுத்துக் கொள்வதுடன், சாப்பாட்டுக்கு அழைத்து உட்கார வைத்து விடுவதுடன் நெருக்கம் நிறைந்து விடுமா என்ன? எவ்வளவோ தூரத்தில் இருந்து விழாவுக்கு வந்து போவார்கள். ஆனால் எவருடனும் நிதானமாக பேசக்கூட நேரம் கிடைக்காது.
அது மட்டுமா.... விழா முடிந்ததும் எத்தனை குறைகள் குற்றங்கள் வருகிறது. அது சரியாக இல்லை, இது சரியாக இல்லை என்று. தான் செய்ததை விட மற்றவர் அதிகப்படியாக செய்திருந்தால், அதை மட்டம் தட்டவென்றே ஏதாவது குறைகளை கண்டு பிடித்து சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
பூப்புனித நீராட்டு விழாவைப் பொறுத்த அளவில் அந்த விழாவே அவசியம் இல்லை என்பது எனது கருத்து. அந்த காலத்தில் அதை நம்மவர்கள் செய்தார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. பழைய காலத்தில் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பவர்கள். படிக்கவோ, வேலைக்கோ போவதில்லை. எனவே தமது பெண் வயதுக்கு வந்து விட்டாள், திருமணம் செய்யலாம் என்பதை ஊருக்கு அறிவித்தார்கள். ஆனால் இப்போதைய நிலமை அப்படியா? நிலமைக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டாமா? அந்த காலத்தில் பெண்களை படிக்க அனுப்புவது, அல்லது வேலைக்கு அனுப்புவது பாவமாக கருதப்பட்டது. அதுவே நமது கலாச்சாரம் என்று எண்ணி, அதையே தொடர்கிறோமா என்ன? மாற்றம் அதில் ஏற்படுத்திய நமக்கு, இந்த தேவையற்ற விழாவை நிறுத்துவதால் மட்டும் கலாச்சாரம் பழுதுபட்டு போய் விடுமா என்ன?
உண்மையில் வயதுக்கு வரும் குழந்தைக்கு தகுந்த ஆரோக்கியமான ஆகாரங்களை வழங்கி, அவளுக்கு புரிய வைக்க வேண்டிய விடயங்களை புரிய வைத்தால், அதுவே குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாகும். அதை விடுத்து, இந்த அவசியமற்ற விழாவினால் எந்த பலனும் இல்லை. கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் சிந்தித்துப் பார்த்தால் என்ன?
பகுத்தறிவோடு ஒத்துப்போகாத பண்பு ஒரு சமூகப்பண்பாகவோ, அல்லது மனிதப் பண்பாகவோ இருக்க முடியுமா?பூப்புனித நீராட்டுவிழா நடத்துவது அந்த குழந்தைகளுக்கு அவர்களது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லிப் புரியவைப்பதற்கே என ஒரு விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆண்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பருவ மாற்றங்கள் எப்படி புரிய வைக்கப்படுகிறதோ, அதே போல் பெண்களுக்கும் புரிய வைக்கப்படலாம். தவிர விழா எடுக்கும் ஒரே நாளில் புரிய வைக்க கூடிய விடயமில்லை இந்த விடயம். படிப்படியாக பெண்ணின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றத்தை, படிப்படியாகத்தான் குழந்தைக்கு புரிய வைக்க முடியும். இப்படி விழா நடத்துபவர்களில் எத்தனை பேர் அப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்கிறார்கள்? உண்மையில் விழா எடுக்காதவர்கள் இந்த வேலையை திறம்பட செய்கிறார்கள் என்பது எனது கருத்து. தவிர வெளி நாட்டில் வாழும் குழந்தைகளைப் பொறுத்த அளவில், அவர்களுக்கு பாடசாலைப் பாடத்திட்டத்திலேயே எல்லாம் விபரமாக சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை எல்லாம் விழா வைத்துத்தான் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
பூப்புனித நீராட்டு விழா செய்வதன் மூலம், வயதுக்கு வந்த பெண்ணுக்கு தகுந்த கெளரவம் கண்ணியம் வழங்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் வைக்கப்படுகிறது. பெண்ணின் உணர்வுகளை மதித்தலிலும், அவளது கருத்துக்கள், செயல்பாடுகளை அங்கீகரித்தலிலும், அவளுக்குரிய கெளரவத்தை கண்ணியத்தை அளிக்க முடியாதா என்ன?
உண்மை கலாச்சாரம் எங்கோ ஒளிந்திருந்து தன்னைத்தானே தேடுகிறது. எளிமையில் இனிமை மறந்தும் போயிற்று. பெருமைக்காய் நிகழ்ச்சிகள் வளர்ந்தும் ஆயிற்று. அநாவசிய செலவுகள் ஆடம்பர கொண்டாட்டங்கள்.கலாச்சாரத்தை கற்று கொடுக்க விளைகையில், அங்கே மனித நேயத்தை அதிகமாய் கலந்து கொடுத்தால் என்ன? அதுதானே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதும், அவசரமானதும். அன்புடன் கலை