Thursday, May 26, 2005

சுனாமி அழிவுகள்.........

சுனாமி அழிவுகள்.........

(தை மாதம் 11 ஆம் திகதி எழுதியது.)

சீற்றத்துடன் கொந்தளித்த கடல் ஆயிரமாயிரம் மக்களை கொலை செய்து விட்டதுமல்லாமல், மீதி இருந்த மக்களையும் நிலை குலையச் செய்துவிட்ட அனர்த்தத்தால் மனது மிகவும் களைத்து இருக்கிறது. இது பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று பல தடவை தோன்றினாலும், எதுவுமே எழுத முடியாமல்.... முயற்சிகள் வீணாகியது. எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டபோது, அவற்றினிடையே வார்த்தைகளும் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தேன். எத்தனை கொடுமை நடந்து விட்டது. செய்திகளைக் கேள்விப்படும்போது மனது பாரத்தால் கனத்துப் போகின்றது. கண்கள் குளமாகின்றன. நடந்து விட்ட கொடூரம் மனதை பிசைகிறது. கடந்த வருடத்தின் கடைசி ஞாயிறு எல்லோர் மனதிலும் கவலையை விதைத்துச் சென்று விட்டது. நெஞ்சமெல்லாம் வெறும் மேக மூட்டம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. துயரத்துடன் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

நடந்து முடிந்துவிட்ட கொடூரத்தை நினைத்தால் யாருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லக் கூட மனதிற்கு தைரியமில்லாமல் இருந்தது. கோரமான இந்த அழிவில் இறந்துபோன உயிருடன் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற எத்தனை எத்தனை மனிதர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது தற்போதைய நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில், வாழ்த்துக்கள்கூட எந்த அர்த்தமும் இல்லாதவையாக மனதிற்கு தோற்றம் தந்தது. இயற்கையின் கொடூரம் இத்தனை பயங்கரமாக இருக்கக் கூடும் என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது போல் இருக்கிறது. நமது நிலத்தில், நமது இனத்தில், அதுவும் ஏற்கனவே பல வழிகளாலும் நொந்து போயிருக்கும் ஒரு சமூகத்திலும் இது நேர்ந்திருக்கிறது என்பதை எண்ணும்போது மேலும் மேலும் துன்பம் அதிகரிக்கிறது.

எத்தனை ஆயிரம் குழந்தைகள்... அப்பப்பா.. நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாய் குழந்தைகள் என்று அறிகையில். பாதிக்கப்பட்ட இடங்களில் எப்படி எதிர்காலம் அமைய போகின்றது என்ற கேள்வி மனதை குடைகிறது. எதிர்காலச் சந்ததியின் முக்கியமான பகுதியையே கடல் கொண்டு போய் விட்டது என்பதை நினைக்கையில் சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக் குறியானது போல் இருக்கிறது.நமது எந்த ஆறுதலும் தமது குழந்தைகளை, கணவனை, மனைவியை என பல நெருங்கிய உறவுகளையும் பறி கொடுத்து விட்டுத் தவிக்கும் மக்களுக்கு உண்மையான ஆறுதலாக அமைய முடியாமா என்பது தெரியவில்லை. பலரும் மனிதாபிமானத்துடன் செய்யும் பண உதவிகள், பொருள் உதவிகள் அவர்களது தொடரப் போகும் வாழ்க்கையை கட்டி எழுப்ப உதவும்தான். ஆனால் அவர்களது இழப்பை ஈடு செய்யுமா என்பது தெரியவில்லை. நம்மாலும் வேறு எதைத்தான் செய்துவிட முடியும் என்பதும் புரியவில்லை. எத்தகைய கொடூரம் நடந்து முடிந்து விட்டது. எத்தனை ஆயிரம் மனிதர்கள் ஒரு சில நிமிடங்களில் கடல் அலைகளினுள் காணாமலே போய் விட்டனர். நினைக்க நினைக்க மனது ஆறுவதாயில்லை. செய்திகளைப் பார்க்கையில் உள்ளம் குமுறுகிறது. அதற்காக பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. இன மத பேதம் எதுவுமே இல்லாமல், கடல் இப்படி ஒரு அட்டூழியத்தை நிறைவேற்றிச் சென்றுவிட்டது.

கடலின் கோரத்தாண்டவத்தில் இருந்து பாதுகாக்க, தனது மூன்று குழந்தைகளில், இரண்டை மட்டுமே தனது இரு கரங்களால் இழுத்துப் பிடிக்க முடிந்ததாகவும், மூன்றாவது குழந்தையை கடல் இழுத்துச் செல்வதைப் பார்த்திருந்தும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கதறும் ஒரு தாய். மூன்று குழந்தைகளில் ஒன்றை விட்டு ஒன்றை தெரிவு செய்வது ஒரு தாயால் முடிகின்ற காரியமா? இந்த சூழ்நிலையில் அந்த தாயின் மன நிலையை நினைத்தாலே மனம் பதறுகிறது. தனக்கு மூன்று கைகள் இருந்திருக்கக் கூடாதா என்று நொந்து கொள்ளும் அந்த தாய்...

பொங்கி வரும் கடல் அலை கண்டு, இனி ஓடி தப்ப முடியாது என்பதை உணர்ந்து, அருகில் இருந்த தோணிகளை இழுத்துக் கட்டும் இரும்புக்கம்பியை கட்டிபிடித்தபடி இருந்த ஒருவர், தன்னை மூழ்கடித்த அலை திரும்பிப் போன பின்னர், மறுபுறம் திரும்பிப் பார்த்தால், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, தன்னை கடந்து சென்ற அலை, இழுத்துக் கொண்டு கடலினுள்ளேயே திரும்பி விட்டது என்கிறார். கண்முன் விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு பாலகர்களை ஒரு சில வினாடிகளில், அடித்துச் சென்று விட்ட கடலை சபிக்கும் அந்த நபர்...

பெரிய கடல் அலை வருகிறது என்று ஐந்து வயதுக் குழந்தை ஓடி வந்து எச்சரிக்கை கொடுத்ததில், ஆலயத்தில் இருந்து ஒடியதில் பல பெரியவர்கள் தப்பித்துக் கொள்ள, எச்சரிக்கை கொடுத்த குழந்தை உட்பட பல குழந்தைகளை கடல் அலை அடித்துச் சென்ற பரிதாபம். என்னைக் காப்பாற்றிய குழந்தையால், தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே என்று முணுமுணுக்கும் பாதிரியார்...

தனது தாய் இறந்து விட்டார் என்பதை உணராத நிலையில், அருகிலேயே இருந்து கவனிப்பாரற்று அழுது கொண்டிருக்கும் மூன்று வயது குழந்தை...

சில சம்பிரதாயங்களை நிறைவேற்ற கடற்கரைக்கு வந்த புது மணத்தம்பதிகளை, கடல் இழுத்துச் செல்வதைப் பார்த்தும், காப்பாற்ற முடியாத வருத்ததில் கரையில் இருந்து ஓடித் தப்பிய உறவினர்கள்...

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த தனது துணையை கடல் கொண்டு சென்றுவிட்ட நிலையில், கடலை கேள்வி கேட்டபடி கடற்கரையிலேயே உலாவிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்...

இப்படி எத்தனை எத்தனை செய்திகள்... தாங்கவே முடியவில்லை. காலங்காலமாய் நடத்தி வந்த நிகழ்வுகளையே இயற்கை இப்போதும் நடத்தி முடித்திருக்கிறது என்பது இந்த அறிவுக்கு புரிகிறது. உலக வரைபடத்தில், நாட்டின் எல்லைகள், நாட்டின் எண்ணிக்கைகள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு வந்ததே இத்தகைய இயற்கை அழிவுகளுடன் இணைந்துதான் என்பதும் கூட அறிவுக்குப் புரிகிறது. ஆனாலும் என்ன, இந்த மனதுக்கு அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சக்தியோ, ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ இல்லாமல்தானே இருக்கிறது. இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள இந்த கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதே.

ஆக்கியவன் அழிக்கிறான், இது ஆண்டவன் நியதி என்கிறது ஆன்மீகம். அழிப்பவன் இப்படி கொடூரமாகவா அழிக்க வேண்டும் என மனது கேள்வி கேட்கிறது. உயிரை இழந்தவர்களை விடவும், இதை எல்லாம் நேரில் அனுபவித்துவிட்டு, பரிதாபமான சூழ்நிலையில், பெற்றோரை இழந்த குழந்தை, குழந்தையை இழந்த பெற்றோர், இன்னும் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன்.. இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள். கண்முன்னாலேயே கடலுக்கு காவு கொடுத்து விட்டு இருக்கும் அவர்களது இழப்பு, அவர்களால் வாழ்க்கையில் மறக்க கூடியதா என்ற கேள்வி தீயாய் தகிக்கிறது. உலகின் நியதி, இயற்கையின் நியதி, ஆண்டவன் நியதி என்ன பெயர் சொல்லி அழைத்துக் கொண்டாலும் அறிவுக்கு புரிவது மனதுக்குப் புரிவதாயில்லை. அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி இப்படி நிலைகளில் அடிபட்டுத்தான் போகின்றது. மனமெல்லாம் வெறுமையாய் இருப்பது போல் உணர்வு, என்ன இது வாழ்க்கை என்றுதான் தோன்றுகிறது.

இது எல்லாம் ஒரு புறமிருக்க, இந்த வேதனையான நிலைகளிலும் சிலரது கருத்துக்களும், வேறு சிலரது நடவடிக்கைகளும் ஆச்சரியமாகவும், மிகவும் வேதனையை தருவதாகவும் இருக்கிறது. இந்த இயற்கையின் கொடூரத்தை எப்படி எல்லாம் தமக்கு சாதகமாக பாவித்துக் கொள்ள விளைகிறார்கள் என்று எண்ணும்போது ஆத்திரமும் கூடவே வருகிறது. சிவ அடியாரை (அதாவது ஜெயேந்திரரை) நிந்தித்ததால், இந்த இயற்கை அழிவின் மூலம் சிவன் உலக மக்களுக்கு பாடம் கற்பித்து விட்டார் என்பதுபோல் ஜெயேந்திரருக்கு ஆதரவான சில ஆத்மாக்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்களாம். இப்படி எல்லாம் சொல்வதற்கும், அதை கேட்பதற்கும் முட்டாள்கள் இருக்கிறார்களே என்று எண்ணும்போது, சிரிப்பதா, அழுவதா, ஆத்திரப்படுவதா, அவர்களின் முட்டாள்தனத்தை எண்ணி பரிதாபப்படுவதா என்று புரியாமல் இருக்கிறது. இத்தனை கொடூரமாய் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்து போனார்களே என்ற எண்ணம், தவிப்பு சிறிதளவாவது இருந்திருந்தால், அவர்கள் இப்படி சொல்லி இருப்பார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன். சே..... என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம். ஒரு தனி மனிதனுக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இத்தனை உயிர்களை சித்திரவதை செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தவரா ஆண்டவர். இந்த மனிதர்கள் எதற்கு இப்படி எல்லாம் சிந்திக்கிறார்களோ தெரியவில்லை.

ஒரு வலைப்பூவில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியன் எல்லோரிடமும் வேண்டுகோள் விடுக்கிறார்... ஜெயேந்திரருக்கு இப்படி செய்ததற்கு தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும் தண்டனையே இது, அதனால் தயவு செய்து யாரும் அங்கே இருக்கும் மக்களுக்கு (அதாவது தப்பி பிழைத்த மக்களுக்கு) எந்த ஒரு உதவியும் செய்யாதீர்கள் என்று. இவர்கள் எல்லாம் படித்தவர்களாம். யாரிடம் சொல்லி அழுவது. ஆண்டவன்தான் வாய்மூடி மெளனமாகவே எப்போதும் இருக்கிறாரே.

அது மட்டுமல்ல. நடந்து முடிந்த பரிதாப நிலையை தமது சுய இலாபத்திற்கு பாவித்துக் கொள்ளும் இரக்கமற்ற மனிதர்கள். நிவாரணப் பொருட்களை உரியவர்களுக்கு வழங்காமல் சொத்துச் சேர்க்க நினைக்கும் அதிகாரிகள். தனித்து, தவித்திருக்கும் குழந்தையை விற்று, பணம் பார்க்க விரும்பும் கொடூர உள்ளம் படைத்தவர்கள். அழுதுகொண்டிருக்கும் பெண்களை (குழந்தைகளை) பாலியல் கொடூரம் செய்ய நினைக்கும் கல் நெஞ்சக்காரர்கள், பெரிய மட்டத்தில் பார்க்கப் போனால் பாரிய அரசியல் சூதே நடக்கிறது. இத்தனையும் பார்க்கையில் மனம் கொதிக்கிறது.